Friday, 10 July 2015

கோபாலா நீ வாராய்!

கோபாலா நீ வாராய்!
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் இல்லை 
ஆதரவு தந்து மகிழ்ந்த  ஆயர்குலமும் இல்லை 
ஆறு குளம் எரியும் பசும் புல்லும் இல்லை 
பால் தரும் பசுக்கள் பதறுகின்றன 
கோபாலா நீ வாராய்!

காய்ந்த புல்லும்  வைக்கோலும் கிட்டுமோ 
தன்  வயிறு நிரப்பி மடி நிறைத்துப் 
பிறந்த கன்றுக்குப் பால் புகட்ட -எனும் 
ஏக்கத்தில் பசுக்கள் மறிகின்றன 
கோபாலா நீ வாராய்!

வெண்மைப் புரட்சியென விதவிதமாய் 
வெள்ளைத் திரவங்கள் செயற்கைப் பைகளில் 
அடைத்து வர அரிதாகிப் போகுமோ 
வெள்ளை,கறுப்பு பழுப்புப்  பசுக்கள் 
கோபாலா நீ வாராய்!

காய்ந்த புல்லுக்கும் கடும் பஞ்சம் 
காகிதமும் செயற்கை இலைகளும் 
ஆகாரமாய் காளைகள் உண்டால் 
குடல் கிழியுமோ மலடாகுமோ 
கோபாலா நீ வாராய்!

பால் சுரக்கும் மடி வறண்டால் வேண்டாத 
சுமையென மலையாளக் கரை ஒதுக்கிக் 
காவு தந்துவிடுகிறான் பாவி மகன் 
நீ ஆதரித்த இனம் அழிந்துவிடாமல் 
கோபாலா நீ வாராய்!

குடிமக்கள் குறை தீர்க்க வேண்டாம் 
"கோ" இனம் காத்திட வா கோபாலா 
உன் வருகைக்கு ஏற்ற தருணம் 
அரக்கர்களுக்கும் குறைவில்லை 
 கோபாலா நீ வாராய்!

தண்ணீர்

தண்ணீர் 

வெண்மேகம் உலா வந்தது
கடலில் தாகம் தனித்தது
தாராளமாய் நிறைந்துவிட
கார்முகிலாய் மாறியது!

காற்றுடன் கலகம் செய்தது

இடிமுழக்கமாய் வசை பாடி
மின்னல் வெட்டும் விழி காட்டி
வானம் விட்டு வெளியேறியது!

மழை என பெயர் மாற்றியது
மலை மேல் தரை இறங்கியது
நிலமகள் அழைப்பு அனுப்ப
அருவியாய் தாவிக் குதித்தது!

நதியாய் ஓடி விளையாடியது
வேண்டி அழைத்தவர் விருப்பம்
கிணறு குளம் ஏரி ஓடை உற்று
என அவதாரம் கொண்டது !

எஞ்சிய சிறு மேனி கொண்டு
தலைவனுடன் சங்கமித்தது
தன் அடையாளம் தொலைத்து
மீண்டும் தலைவன் பெயரால்
கடல் என பெயர்க் கொண்டது!

Tuesday, 7 July 2015

ஹைக்கூ -4

ஹைக்கூ -4
61.கம்மஞ்சோறும் களியும் உண்டு 
நெல்மணியை விளைவிக்கும் 
விவசாயக் கூட்டம்

*******************************************************
62.குறுக்கு வலி மறந்திருக்க
இட்டு கட்டிப் பாட்டுப் பாடும் 
கழனிக் குயில்கள்

*******************************************************
63.பஞ்ச பூத சேர்க்கை
பைந்தமிழச்சி தொடுகை
விளைந்ததுப் பயிர்

*******************************************************
64.படித்து பாழ்ஆக மாட்டேன் 
ஆடு மேய்த்து ஆளாவேன் 
அகராதிப் பெண்

*******************************************************
65.பீங்கான் சிற்பங்கள் 
கொலு இருந்தன 
விற்பனை வீதியில்

*******************************************************
66.ஒற்றை மர நிழலில் ஓய்வு 
எஜமானர் ஏறும் வரை 
வாகனம்

*******************************************************
67.மலை அடிவாரக் குளம் 
பொரி ஏந்திய கரங்கள் 
எதிர்ப்பார்ப்போடு மீன்கள்

*******************************************************
68.வழுக்கும் பாறை வாகாய் கம்பி 
முட்டும் மூச்சு முழங்கால் வலி 
உச்சி அடையவே ஆசை !

*******************************************************
69.பருவம் தப்பிய மழை 
அனுசரித்து வளருமோ
பயிர்கள்

*******************************************************
70.நறுக்கென மூன்று வரி 
நயமாய் விரிந்தப் பா 
கவிக்கூ

*******************************************************
71.மரநிழலில் ஒளிர்கின்றன 
ஆயிரம் தாரகைகள் 
இலையுதிர்க்காலம்

*******************************************************
72.புவி மீது புனல் கொண்டது 
கிணறு ஏரி அருவி ஆறு கடல் எனும் 
அவதாரம்

*******************************************************
73.பஞ்ச பூதங்கள் புனைவு 
புறத்தே விரிந்தது அண்டம் 
அகத்தே அமைந்தது பிண்டம்

*******************************************************
 74.உள்ளிருந்தது ஒளியே 
உரசிக்கொணர்ந்தது வெளியே 
தீக்குச்சி

*******************************************************
75.பொதிகை மலைத் தென்றல் 
புயலாய் மாறியது 
ஐப்பசியில்

*******************************************************
76.காற்றாய் மாறியத்தீ சிறையில் 
இல்லால் கருணை காட்ட 
ஜாமீனில் விடுதலை

*******************************************************
77.உழவன் வளர்த்தப் பெண் 
நெல்"மணியாய்" கடனடைத்து 
வைக்"கோலாய்" நின்றது

*******************************************************
78.பயிருக்கு இரவு உணவு 
நீர்ப் பாய்ச்சும் மங்கை 
துணை வந்தது அரவம்

*******************************************************
79.பசியவயல் பகல்மேடை 
நாற்றுகள் நடனம் ஆட 
பாவையர்ப் பாட்டு
******************************************************
80.இருளில் வம்பளக்கவென 
வரப்புத் தாவி வந்த
தவளை "யார்"

Sunday, 5 July 2015

லிமரைக்கூ-3

லிமரைக்கூ-3
21.மனைவி கொடுத்த கணக்கு 
வரவு செலவு பட்ஜெட்டில் இடிக்க 
வந்தது இடையே பிணக்கு

************************************************************
22.பட்சி விழித்தது அந்தியில் 
பகலவனின் பார்வையில் இரைந்து இரைதேடி
கூடு திரும்பியது சந்தியில்
*************************************
23.கொட்டும் மழையுடன் இடி
மிரட்டும் மின்னல் சுழற்றும் காற்று
சற்றும் பயமற்றக் கொடி
*************************************
24.அணைந்தது உடலின் அகத்தீ 
ஆவி அதை துறந்து பறக்க 
பற்றியது உடலை புறத்தீ
*************************************
25.ஓர விழிப் பார்வை 
மெய்யோ என நோக்க மறைத்தது 
நாணம் எனும் போர்வை
*************************************
26.கண்டேன் அழகிய வானவில்லை
தோழியர் வந்து பார்க்கும் முன்னே 
வண்ண வில் காணவில்லை
*************************************
27.வீட்டில் வளர்ப்பது பசு
எழுத்துப் பிழையாய் நோட்டில் எழுதினான் 
வீட்டில் வளர்ப்பது கொசு
*************************************
28.கையில் எடுத்தால் ஊசி 

சிதறிக் கிடந்த வண்ண மணிகளை 
சேர்த்துக் கோர்த்தால் பாசி
*************************************
29.இடுப்பில் எடுக்கும் வலி 

தலையைத் திருப்பி குழந்தை முட்ட 
கருப்பை கொடுக்கும் வழி
*************************************
30.இரவு நேர வானம்
நிறைந்த நிசப்தம் தாரகை சூழ
நிலவு தரும் கானம்
*************************************

31.பழகித் தந்தேன் ஹிந்தி 
எழுத்தைப் பரிகசித்தான் இது கோட்டை 
பிடித்து தொங்கும் மந்தி