Sunday, 13 September 2015

இவ்விதம் செய்தாய் போலும்

இவ்விதம் செய்தாய் போலும் 

சுத்தமாய் என்றும் உடையவன் நீ 
அசுத்த ஆன்மா என்றும் நான் 
என்னுள் நீ எனில் 
நான் ஏன் அசுத்தமானேன் 
அசுத்தமாய் நான் எனில் 
என்னில் நீ எங்கே 
நான் எனும் நான் எது
நான் எனும் என்னில் நீ 
தனித்தும் ஒன்றியும் 
ஒட்டி ஒட்டாமல் நின்று 
வேடிக்கைப் பார்ப்பாயோ?
ஆடட்டும் அடங்கட்டும் என !
ஆம் அதுவும் சரிதானே 
பட்டுத் தெரிந்தால் தான் 
பரம் எனும் மகத்துவம் 
அறியும் இந்த நான்.
அதற்காய் இதை இந்த நானை 
இவ்விதம் செய்தாய் போலும் 
பற்பல எண்ணம் தந்து 
குணம் தந்து திறமை தந்து 
பிடிப்பு தந்து பாசமெனும் 
தளையைத்  தந்து 
தவிக்க விட்டு தாண்டிவர 
தரிசனம் கிட்டும் எனும் 
சிந்தையை தந்தாய் 
இப்போது எதைப் பிடிக்க 
எதை விடுக்க, எதை நோக்க 
எதை தவிர்க்க ,கழித்து கழித்து 
காத தூரம் வந்த பின் 
கழித்ததை நோக்கா 
சிந்தையும் வேண்டுமே 
சலனம் கொண்ட மனதில் 
ஆசை எனும் நெருப்பை 
அனைத்து உள்ளம் புண்படாமல் 
அக்னி பரிட்சையில் தேறி 
அத்தா நீயே சரண் என 
நின் கழல் பற்றவேண்டுமே!
இப்பிறவியில் சாத்தியமா 
மாய்த்து, மறைத்து ,மறுபிறப்பை 
தருவாயோ? ஆனால் அதற்கும் 
கலங்கேன் தருவது நீதானே 
தெளிவு கொடு ,காட்சி கொடு 
இவ்விதம் நான் எனும் இதில் 
எனைப் புகுத்தி நின்றாயே 
நானதேது? நீயதேது ?
புறக் காட்சி விடுத்து அகம் புகவும் 
அகத்தே வந்து அறிவுறுத்து! 
குழம்பி குட்டை போல் உள்ளது 
தெளிந்த நீரோடையாக்கு 
நம்பி நிற்கிறேன் 
சிந்தை தெளிய நான் எனும் இதை
 இவ்விதம் செய்தாய் போலும் 
என்றே.


Tuesday, 1 September 2015

ஒளிக் கோலம்

ஒளிக் கோலம்
யாதுமாகி நின்ற பரமே
எங்கே நீ எனத் தேட
எங்கும் நீயே 
அலைகள் நடுவில்
அகன்ற விண்ணில்
விரவிய ஒளிச்சிதறல்
எண்ணற்ற எண்ணங்களின்
உதறிய உருவம் போல்
சிதறிய சித்திரமாய்
மாயவா நீ என் செய்தாய்
விளக்கம் தேவை கொண்ட
மந்திரம் போல் வானில்
வண்ண ஒளியை சிதறவிட்டாய்
புலப்படாத பொன்ஒளி
புதிய கவி சொல்லுமோ
ஒளிக் கவிதை கண் காணும்
அதை நெஞ்சம் உணருமோ
ஒரு நொடியில் காட்டி
ஒளிரும் உன் கருணை
யாம் அறிய ஆகுமோ
யாதுமாகி நின்ற பரமே
சிந்தையாக வாராய்
நின் விந்தை தெளிவி
அடியாள் யாசகம் இது
அடையப் பெருமோ
ஆதரவு தாராய்
*******************************************************************************

நிஜமாய் நீயா
அம்புலி அழகாய் தன் ஒளி வீச
காரிருள் கஞ்சனாய் சற்றே தன்
இருள் குறைத்து அம்புலிக்கு 
அனுமதி அளித்து இருண்டிட
வானம் மங்கிய புகை போல்
வெண்ணிலாவோடு உறவாடி
முடிந்தவரை மின்னியது
மூகமூடியினை ஒரு பாதி கிழித்து
தன் முகம் காணத் துடிக்கும் மாது
யாரும் கண்டு விடும் முன்னே
தன் சுயத்தை தரிசிக்க முயற்சி
யார் யாருக்காகவோ பூசிய
அரிதாரம் முகம் ரணமானது
சற்றே கலைத்திடுவேன் நான்
சூழ்ந்திருந்த முகங்கள் எல்லாம்
கோனாமல் காக்க என பூசியவை
நவரசமும் காட்டி நின்ற முகமூடி
நயமாய் நடித்து வந்த நாயகிமுகம்
இருள் சூழ்ந்த இச் சிறு ஒளியில்
இயல்பை காண விரும்புகிறேன்
இன்று மட்டும் அகற்றிவிடுகிறேன்
************************************************************************************
விதைப் பயணம்
மண் துளைத்து வெளிவந்து
முளை விட்டுத் துளிர்த்து
செடியாகும் முயற்சியில் 
முன்னேறும் விதைப் பயணம்
இன்னும் இரண்டு இலை
சேரட்டும் செடி என தன்னை
அறிவித்துக்கொள்ள
சிறிது வளர்ந்த பின்னே
விதைத்தவனும்
நீர் வார்த்தவனும்
அறியாமல் அவன்
கண் மறைத்து
இலைகள்,கிளைகள்
சில மொட்டுகள் பூ வென
சடுதியில் வளர்ந்துவிடும்
முளை விடும் போதே
பச்சையம் தயாரித்து
தானே பசியார அறிந்தது
பருவம் வரும் போது
பக்குவமாய் காய்த்து
கனிந்து மனம் பரப்பும்
விதைப் பயணம் விண்
தொடும் முயற்சி போல்
விரைந்து வளர்ந்து நிற்க
படர்ந்த அதன் உருவில்
பசியாறியவை பல உயிர்கள்
கூடு தேடியவை பல உயிர்கள்
பல்லுயிர்கள் நலம் நாடும்
பயனுள்ளதாய் வடிவெடுத்த
விதைப் பயணம் போல்
கனிந்து வீழ்ந்தும்
விருட்சமாய் புணர்ஜென்மம்
எடுக்கும் விதைப் போல்
பயனுள்ளதாய் அமையட்டும்
மனிதப் பயணம்.
*********************************************************************
ஒளி தேவை
பச்சை வண்ணக் கொடி
மண்ணில் பிறந்தது
கூரை எட்டி மணம் பரப்ப 
படர பிடி வேண்டும்
மரமோ மட்டையோ
இரும்பு தண்டமோ
இறுக்கிக் கட்ட கயிறு
இது தான் வேண்டும்
எனும் அடம் இல்லை
நீர் வேண்டும் அது
மழை நீரோ பனி நீரோ
நிலத்தடி நீரோ ஏதோ
இது தான் வேண்டும்
எனும் அடம் இல்லை
ஒளி வேண்டும்
மின் விளக்கோ
மின்மினிஒளியோ
மெழுகு ஒளியோ இல்லை
இது தான் வேண்டும்
எனும் அடம் உண்டு
அரும்பை மலர்விக்கும்
சக்தி எதில் உண்டோ
புவிஉருளை தினம் தினம்
சுழன்று தருகிறதோ
மௌன விரதம் கொண்ட
கொடிகள் மணம் விட்டு பேச
துடிக்கும் தலைவன் யாரோ
அவன் தரும் ஒளி வேண்டும்
மங்கியதோர் ஒளியேனும்
சிறு பார்வை முகம் காட்டி
மேகத்தில் மறைந்தாலும்
அவன் தரும் ஒளி வேண்டும்
********************************************************************
நீலவண்ணனா ஈசன்?
பார்கடல் கடைந்தனர்
ஆலகால விடம் உமிழ்ந்தது
அள்ளிப் பருகினார் அப்பன் 
அம்மை கண்டத்தில் கைவக்க
அங்கே தங்கியது ஆலகாலம்
அம்மை அவ்விடம் கைவைத்து
அவ்விடம் அங்கே தங்கியதால்
நீலகண்டன் ஆனார் ஐயன்
கண்டம் தங்கிய விடம் விரவி
பரவியிருந்தால் கற்பூர மேனி
கார்வண்ணம் கொண்டிருக்குமோ?
அதில் ஐயம் கொண்டவர்
வரைந்த ஒவியத்தில்
நீலவண்ண ஈசன் ஆனாரோ!
***************************************************************************
கண்ணா மூச்சிஆட்டம்
மறைந்து நின்றான் அண்ணன்
தேடித் திரிந்தது தங்கை
தேடிப் பார்த்து முடியவில்லை 

தேடுதல் ஆட்டம் விடுத்து
வண்ணங்கள் கொண்டு
வரைய சென்ற தங்கை

சாமர்த்தியமாய் மறைந்து
வியர்வையில் குளித்தான்
அலமாரி அடுக்கில் அவன்

அறைக்கு சென்ற அம்மாவிடம்
ரகசிய விசாரணை அண்ணன்
தங்கை எங்கே என்றே?

பாப்பா கலர் அடிக்குதே
அம்மா சொல்ல அவசரமாய்
இறங்கி தன் கோபம் இறக்க
தங்கையை தேடி ஓட்டமாய்
அடிக்க ஓடினான் அண்ணன்
கண்ணா மூச்சிஆட்டம்!
***********************************************************************
கை கொடு அத்தா!
எப்போதும் அகத்தே தோன்றும் விடை தெரியாத விந்தை கேள்விகள்
பக்குவம் வரும் பொழுது
உயிர் தன் பக்குவ நிலையை 
அளவையில் நிறுத்து அதன்
அடிப்படையில் கணக்கில் தவறாத கணித மேதையாக அவன் தருவான் பக்குவம்.
சாளரத்தை பகுதியாக திறந்தோ
ஒரு துளை மட்டும் இட்டோ
உணர்த்தி காட்டுவான்!
பக்குவ நிலை எவ்வகை அடைவது
தலையில் அடித்து சொல்லும்
அனுபவத்திலா
கண்கள் மேயும் புத்தக அறிவிலா
அனுபவம் எனில் உணரவும்
அறிவு எனில் சித்தம் வழி
புத்தியில் உறைந்ததை
திருப்பிப் பார்க்கவும் திறன் வேண்டுமே!
நிகழ்வுகள் நிற்பது இல்லை
அதை அவ்வாறே அறியும்
நிதர்சன அறிவும் பெறுவதில்லை
இவ்வாறே யான் உழன்று திரிதல்
இது தான் உம் சித்தமா ?
எமை உயர்த்தும் பணி உமது !
உம் பணி விரைவாக முடிக்க
எண்ணமில்லையோ அத்தா?
ஓரடி உன்னை நோக்கி வைக்க
ஈரடி பின்னே இழுபடுகிறது
ஆனாலும் இழுத்து பிடித்து
சிக்கன நின் பாதம் தழுவ
வழுவாத வைராக்கியம் கொண்டு
முயன்று முன்னேறுவேன்
கை கொடு அத்தா !
***************************************************************
சித்தம் கொண்ட பித்தம்
சித்தம் என்றும் நிலைத்திருப்பதில்லை
பித்தம் பிடித்தே அலைகிறது
சிலநேரம் கவிப்பித்து 
கைவினைப் பித்து
தூரிகை பித்து
வண்ண நூல்கொண்டு
சித்திரபூதையல் பித்து
கதைப் பித்து
கணினிப் பித்து
கதைக்கும் பித்து
வம்பளக்கும் பித்து
சேதி சொல்லும் பித்து
சித்தாந்தப் பித்து
செவியுறும் பித்து
காட்சிப் பித்து
பக்திப்பித்து
பதியின் மேல் பித்து
படிப்பிக்கும் பித்து
தேடுதல் பித்து
இதுவெல்லாம் வேண்டாம்
சமைக்கும் பித்து பிடிக்கட்டும்
சுவை பித்து வரும் என
மகன் மன்றாடினாலும்
சுத்தப் பித்து பிடிக்கட்டும்
வீடு தூய்மையாகும் என
வீட்டுக்காரார் கதறினாலும்
சித்தம் நிலைப்பதில்லை
சில பித்துக்கள் பிடிப்பதில்லை
பிடித்த பித்தும் நிலைப்பதில்லை
பித்தம் தெளிய வேண்டும்
பித்தன் சித்தம் !
சித்தம் தருமோ பித்தன்
பிதற்றும் என பித்தம் தெளியுமோ
பித்தனே அறிவார்!
**************************************************************************
குவிந்த குப்பைகள்
குப்பை என்பன யாது
குவிந்திருக்கும் கூட்டம்
அகத்தே அல்லது புறத்தே 
தேவை எனவே சேர்த்தது
சேர்த்த பின்னே புரிந்தது
தேவையேயில்லை என்றே
சேர்த்தவை குப்பையானது
அகற்றுவது எவ்விதம் அறியோம்
தூர வீசவேண்டும் இதை
தூய்மைப் படுத்த வேண்டும்
வெளியேற்ற பாதை எங்கே
அடைத்து கிடக்கும் கதவுகள்
கதவை திறக்க திறவுகோல்
திறவுகோல் ஆயிரம் உண்டு
சரியானது ஏது அறியோம்
கள்ள சாவியும் உண்டென்று
பிற்பாடு அறிந்தும் அசராது
சரியான திறவுகோல் தேடி
தேடல் தொடர அகப்பட்டது
பூட்டுக்கு பொருந்தியது
புலப்படாத வழி புலப்படும்
ஆவல் கொண்டு திறக்க
நறுமணம் உள்ளே புகுந்தது
குப்பை வாசம் அதை அடக்க
துவங்கியது துவந்த யுத்தம்
குப்பை அள்ளி வெளியேற்ற
இருகை கூட்டி முயற்சி செய்ய
மெல்லவே விலகும் குப்பை
பொறுமை அவசியம் அன்றோ
விடா முயற்சி வேண்டும்
காத்திருக்க வேண்டும்
குவிந்த குப்பைகள் அகன்று
நறுமணம் உள்ளே நிரம்ப!
***************************************************************************
காற்றாக நானும்
காற்றாக நான் இருந்தேனா
தேகம் நுழையா இடம் காண
வதனம் அடையா மேடு ஏற 
கால் சுவடு இல்லா வனம் நாட!
காற்றாக நான் இருந்தேனா
அலைகடல் மேல் தவழ்ந்திட
மலை முகடுகளை கடந்திட
பனி சிகரத்தில் உறைந்திட !
காற்றாக நான் இருந்தேனா
ஆகாயத்தில் பரவி நிறைந்திட
அம்புலியோடு விளையாடிட
தாரகைகளுடன் கதைத்திட!
காற்றாக நான் இருந்தேனா
மரங்களை ஆட்டுவித்து மகிழ
வயல் வழியூடாக தவழ்ந்திட
மூங்கில் துளை இசையாகிட!
காற்றாக நான் இருந்தேனா
மெல்லியால் இடை சுற்றிட
காதலன் தூதனாய் சென்றிட
தென்றலாய் மகிழ்ந்து குழாவிட!
காற்றாக நான் இருந்தேனா
புயலாய் மாறி புவி புரட்டிட
மழையை வாரி வருசித்திட
ஊழி காற்றாய் உலகழித்திட !
காற்றாய் நான் இருந்தேனா
கடந்த பாதை அறிந்திடோம்
கடக்கும் காலம் கடந்த பின்னே
காற்றாய் நான் இருப்பேனா?
***************************************************************************
நிறைந்து வழிந்த பேருந்து
நிறுத்தம் வந்ததும்
கை கால்களை பிய்த்து
கூடத்தை விலக்கி
குதித்து கோர்த்தேன் உடலை
நிறைந்து வழிந்து
வளைந்து சென்ற பேருந்து
கிளம்பி செல்கையில்
ஏதோ ஒன்றையும்
எடுத்துச் சென்றது -என்னை
தனியே நிறுத்தி !
******************************************************************
அன்று ஓர் நாள்
அது ஓர் ஆண்டு விழா
அரங்கில் ஏறிய தங்கை
பார்த்து நின்ற தமக்கை 
பார்வையாளர் கூட்டம்
பரிதவித்தது
பாரி மகளிருக்காக
அன்று இதே நாள்
நம் தந்தை உடன் இருந்தார்
இன்று நம்மை கைவிட்டு
வானகம் புகுந்தாரே !
தங்கை பேசிய வசனம்
தமக்கை தன் கண்ணீர்
அருவியாய் பொழிய
தடுத்து நிறுத்த பட்ட பாடு
இரு மாதம் முன்னே
தகப்பனை இழந்த
பாலு மகளிருக்காக
பரிதவித்து நின்றது
அந்தக் கூட்டம்
அன்று ஓர் நாள்
******************************************************************
பெண்
சொல்ல வரும் சேதி புதிதல்ல
சொற்கள் எவையும் எனதல்ல
முன்னரே என் சோதரிகள் பலர்
மனம் நோக சொன்னவை தான்
பெண் என பிறவி பிறந்த மகள்
மழலை மொழி பேசி மகிழ்வுடன்
சுற்றம் மகிழும் சுகந்தமானவள்
சொப்பு சாமானில் சமைத்து
சிறுமியாக இருந்த நாள் முதல்
குடும்பம் நடத்த நடை பயின்றவள்
உடன் பிறப்புகள் நட்பாக நின்று
தோள் கொடுத்து துணை நிற்பவள்
குச்சு புகுந்து மங்களம் நிறைந்த
கணனியாய் பூத்து நிற்பவள்
தாவணி தழைந்தாட அசைந்து
அன்னநடை பயின்று நின்றவள்
தலைவன் கைதலம் பற்றியவள்
அவன் தன் அகம் சிறக்க அறம்
தழைக்க இல்லறம் புகுந்தவள்
மனைமாட்சிமை நிறைந்தவள்
தாயாக உயர்ந்து தரனி வென்றவள்
ஆயுள் முழுதும் அயராது உழைத்து
சொந்த பந்தம் சுகம் பேணி
சுற்றம் நடப்பில் கலந்திருந்தவள்
தொங்க தொங்க தாலி கட்டி வட்ட
குங்குமம் இட்டு வளையல் நிரப்பி
பட்டு சேலை சரசரக்க நின்றவள்
மங்கையர்க்கரசி ஆகி நின்றால்
ஓர் நாளில் வாழ்ந்த வாழ்வில்
நிறைவு கொண்ட தலைவன்
தான் கொண்ட கடமை முடிந்தது
என வானகம் நோக்கி பறந்துவிட
பிரிவு துயரில் துடித்த பெண்மை
தன் துயர் தாங்கி தேறி நின்று
பிள்ளைகள் சுற்றம் நலம் வேண்டி
ஆண்டவன் திருவடி பற்றி நிற்க
மங்களம் பொங்கும் வாவரசி என
வாழ்த்தி நின்ற இம் மண்ணுலகு
விதவை எனவே தனிமை செய்தது
அமங்களம் என்றே தூற்றி நின்றது
எழுத்தில் காண்கையில்
ஏட்டில் படிக்கையில்
எங்கோ நடக்கும்
செய்கை என்றே எண்ணமிருந்தது
கண் முன்னே
காண்கையில்
கையாளாகாது
கடக்கும் மானிடம்
பதிவில் காண்கையில்
லைக் இட்டு மட்டும்
தான் உயர்ந்தோன்
எனக் காட்சி படுத்தும்
மனிதஇனமோ இது
பெண்ணுக்கு பெண்ணும்
மூட மதியும் மூட நம்பிக்கையும்
பேதமையும் எதிரே!
என்று தனியும் இந்த
பெண்மையின் சோகம்?
**********************************************************************
என் மனதின் மாளிகையில் 
உயர்ந்த ஓர் உயரத்தில் நீ 
குணம் மிக்க உயர் பிறப்பாய் 
பாசம் மிகுந்த பண்பாளனாய்
அங்கிருந்து வீழ்ந்து விட்டாய்
நீயும் அறியாமல் நீ வீழ்ந்தாய்
ஆனால் காயமடைந்தது நான்
மனம் ரணமானது எனக்கு
மாறாத வடு உண்டானது
என் நம்பிக்கை தகர்ந்தது
இதில் தவறு எனது தான்
நீ உயரே இருந்தாய் என்றே
உனக்கே தெரியாது அதில்
உன் தவறில்லை எனது தான்
உன் இயல்பு அது தான் என
உணரா தவறு, உன் செய்கை
சராசரி தான் என அறியா தவறு
உன்னிடம் கொண்ட உரிமை தவறு
தன்னவன் தான் எனும்
எண்ணத்தில் தவறு என என்
தவறு ஏராளம் இருக்க உன் மேல்
தவறு என எப்படி குற்றம் சுமத்த
ஆனாலும் நீ வீழ்ந்ததில் அடி எனது
காயம் எனது வலியும் எனது
இனி என் தவறு திருத்தப்படும்
யாரையும் உயரே ஏற்றாமல்
இயல்பான மனிதன் எனவே
இன்னொருவர் மொழியில்
எதிர்பார்ப்பு வன்முறை இன்றி
இயல்பாய் ஏற்பேன் யான்
யாரையும் ஏற்றாது தூற்றாது
யாரும் விழ வேண்டாம்
எனக்கு வலியும் வேண்டாம்