அம்மா அம்மா !
விதையாய் விழுந்து உன் அகப்பையில் நிறைந்து
நின் சுவாசம், நின் குருதி, நின் வெப்பம் உறிஞ்சி
அருவம் தொலைத்து உருவம் ஆகி, பிண்டம் உயிர்த்து
உன்னுள் நிறைந்ததே உலகம் என உருண்டு புரண்டு
உன் உள்ளம் கொண்ட கனவு , எண்ணம்,ஏக்கம் எல்லாம்
என்னிலும் நிறைத்து வளர்ந்த பத்து மாத பந்தம் !
உன்னுள் வலியை நிறைத்து என் வழியில் நான்
பிறந்தேன் வளர்ந்தேன் வளர்த்தாய் நீ !
பிறவி பெருங்கடலில் எதிர்நீச்சல் எட்டிப் போட்டு
எமனே வந்த போதும் எதிர்த்து நின்றாய் !
என் கடமை முடிந்த பின்னே வாடா என்றே
துணிவுடன் கூக்குரலிட்டு நின்றாய் !
மடிவிட்டு இறங்கிய பிள்ளைகள் தத்தி நடக்க
வாழ்க்கை ஓட்டத்தில் ஓட கற்று தந்தாய்!
இன்ப துன்பம் யாவிலும் தோள் கொடுக்க
பிள்ளைகளுக்கு தக்க துணை தேடித் தந்தாய் !
வந்த கடமை முடிந்தது என நோயால் நொந்த
உடல் விடுத்து உயரே பறந்து விட்டாய் !
பள்ளி சென்ற வேளையில் படிப்பித்த உன்னிடம்
மதிப்பெண் காட்ட மறுத்தேன் !
அப்பா கையெழுத்து தான் வேண்டும் என,
அன்று விழுந்தது கன்னத்தில் அறை
தாத்தா பரமசிவம் தந்தார் !
அன்று தவறு திருத்தப் பட்டது.
ஆனால் மீண்டும் வருடங்கள் தாண்டி
அந்த பரம சிவம் தந்த அறை !
திருத்த இயலா தவறாய் தேடுகிறேன் உன்னை !
தாயாகவே வாழ்க்கைப்படும் மாதர்களில்!
துறு துறுவென திரியும் தோழிகளிடம் !
சுற்றம் மெச்சும் சுமைதாங்கிகளில் !
சகித்து வாழும் சகோதரிகளில் !
பொறுமை கொண்ட பெண்மணிகளில் !
துணிந்த மனம் கொண்ட மங்கைகளில் !
உடல் நலிந்த விதவை தாய்களில் !
தனியாய் மக்களை கரை சேர்க்கும்
தன்னலம் கருதா தாயுள்ளங்களில் !
எல்லாம் வல்ல இறைவன் இரங்கி
மறைந்தாரில் ஒருவரை தாரேன் என
எனக்கு வரம் தரட்டும் ! அந்நாளில்
திரும்பிவிடு என் அம்மா அம்மா !