Thursday, 31 December 2015

அந்தாதி நாள்

அந்தாதி நாள்!

அடுத்த வருடம் பிறப்பு நாளை 
அந்தம் அடைந்த இந்த வருடம் 
ஆதிமுதல் தொடங்கும் நாளை 
அடுத்த வருடம் எனும் பெயரில் 
ஆங்கில வருடம் எண்ணிக்கை 
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் 
தன்னுள் தரணி நிகழ்வைத் 
தேதி வாரியாக நிறைத்தும்
அகிலம் முழுதும் அறிய எளிது 
இந்த ஆங்கில வருட எண்ணிக்கை

எதிலும் வேண்டும் கணக்கு 
எண்ணி எண்ணிக் கழியும் பொழுது 
துளி துளியிலும் நிமிடம் நாழிகை 
நாள் வாரம் மாதம் ஆண்டு என 
இதிலும் வந்தது கணக்கு 
மனிதன் வாழ்க்கை சுழல் 
சுற்றும் இந்த கணக்கில்

சென்ற வருடம் 
விட்டுச் செல்லும் 
சில நினைவுகளைக் 
கடத்திச் செல்லும் 
சில மனிதர்களைப் 
பிரித்துச் செல்லும் 
சில உறவுகளைப் 
பதித்துச் செல்லும் 
சில பதிவுகளைப் 
பறித்துச் செல்லும் 
சில பற்றுகளைக்

கொண்டு சேர்க்கும் 
சில கருத்துகளை 
சில எதிர்பார்ப்பை
சில நம்பிக்கைகளை 
வாழும் சக்தியை 
வாழ்வு பிடிப்பை 
வாழ்க்கை பாதையைத் 
தெளிவு சிந்தையை

அந்தம் ஆனது ஓர் ஆண்டு 
ஆதி முதல் தொடர்ந்தது 
மீண்டும் ஓர் ஆண்டு 
மனிதன் கணக்கில் 
நாளும் கோளும் தன்வழி 
தானே சுற்றித் தரும் நாளில் 
ஒன்றே போலே தந்தது 
மற்றும் ஓர் நாள் 
அந்தமில்லா நாளா 
அந்தாதி நாளா 
நாயகன் நினைக்கும் வரை 
அந்தாதி ஆகும் நாள்.

No comments:

Post a Comment