Sunday, 4 December 2016

அம்மா அம்மா !

அம்மா அம்மா !

விதையாய் விழுந்து உன் அகப்பையில்  நிறைந்து 
நின் சுவாசம், நின் குருதி, நின் வெப்பம் உறிஞ்சி 
அருவம் தொலைத்து உருவம் ஆகி, பிண்டம் உயிர்த்து 
உன்னுள் நிறைந்ததே உலகம் என உருண்டு புரண்டு 
உன் உள்ளம் கொண்ட கனவு , எண்ணம்,ஏக்கம் எல்லாம் 
என்னிலும் நிறைத்து வளர்ந்த பத்து மாத பந்தம் !

உன்னுள் வலியை நிறைத்து என் வழியில் நான் 
பிறந்தேன் வளர்ந்தேன் வளர்த்தாய்  நீ !
பிறவி பெருங்கடலில் எதிர்நீச்சல் எட்டிப் போட்டு 
எமனே வந்த போதும் எதிர்த்து நின்றாய் !
என் கடமை முடிந்த பின்னே வாடா என்றே 
துணிவுடன் கூக்குரலிட்டு நின்றாய் !

மடிவிட்டு இறங்கிய பிள்ளைகள் தத்தி நடக்க 
வாழ்க்கை ஓட்டத்தில் ஓட கற்று தந்தாய்!
இன்ப துன்பம் யாவிலும் தோள்  கொடுக்க 
பிள்ளைகளுக்கு தக்க துணை தேடித் தந்தாய் !
வந்த கடமை முடிந்தது என நோயால் நொந்த 
உடல் விடுத்து உயரே பறந்து விட்டாய் !

பள்ளி சென்ற வேளையில் படிப்பித்த உன்னிடம் 
மதிப்பெண் காட்ட மறுத்தேன் !
அப்பா கையெழுத்து தான் வேண்டும் என,
அன்று விழுந்தது கன்னத்தில் அறை 
தாத்தா பரமசிவம்  தந்தார் !
அன்று தவறு திருத்தப் பட்டது. 

ஆனால் மீண்டும் வருடங்கள் தாண்டி 
அந்த பரம சிவம் தந்த அறை !
திருத்த இயலா தவறாய் தேடுகிறேன் உன்னை !

தாயாகவே வாழ்க்கைப்படும் மாதர்களில்!
துறு  துறுவென திரியும் தோழிகளிடம் !
சுற்றம் மெச்சும் சுமைதாங்கிகளில் !

சகித்து வாழும் சகோதரிகளில் !
பொறுமை கொண்ட பெண்மணிகளில் !
துணிந்த மனம் கொண்ட மங்கைகளில் !

உடல் நலிந்த விதவை தாய்களில் !
தனியாய் மக்களை கரை சேர்க்கும் 
தன்னலம் கருதா தாயுள்ளங்களில் !

எல்லாம் வல்ல இறைவன் இரங்கி 
மறைந்தாரில் ஒருவரை தாரேன் என 
எனக்கு வரம் தரட்டும் ! அந்நாளில் 
திரும்பிவிடு என் அம்மா அம்மா !






Thursday, 14 July 2016

வாக்கும் நோக்கும்-2

வாக்கும் நோக்கும்-2
ஆற்றின்ப வெள்ளமே -திருவாசகம் 

         இறைவனை, எம்பெருமானை அழைத்து மகிழ ,துதித்து மகிழ, கூவி அழைக்க ,ஆயிரம், ஆயிரம் நாமங்கள் உண்டு. ஆனாலும் மணிவாசகர் பெருமான், திருவாசகத்தின் முதல் பதிகம், சிவபுராணத்தில் ஓரிடத்தில்  ஆற்றின்ப வெள்ளமே என்று அழைத்து மகிழ்ந்திருப்பார்.ஆற்றின்ப வெள்ளம் எப்படிப்பட்டது , அதனை உவமையாக்கி இறைவனை துதிக்க என்ன இருக்கிறது. அதன் விளக்கம் இவ்வாறாக வருகிறது. 
        முதலில் ஆறு என்பது இந்த உலகின் ஜீவ நாடி, எல்லா உயிர்களுக்கும் வடிவதானம் செய்யும் பிரபஞ்ச சக்தி பஞ்சபூதங்களில் ஒன்று. நீரின்றி அமையாது உலகு , ஆகவே இறைவன் உயிர்களுக்கு இதுபோன்று இன்றியமையாதவன். தாக்கம் தணிக்க நமக்கு நீர் உதவும், அதுபோல் பர உலக  தரிசனம் காண, முக்தி எனும் பதம் அடைய நீராய் இருந்து தனிப்பவன் இறைவன்.

        ஆறே இன்பம் தான், அதுபோல் இறைவனும், ஆனாலும் ஆற்றின்ப வெள்ளமே என அழைக்கின்றார். ஓடிக்கொண்டே இருக்கும் வெள்ளம் தான் ஆறு, அது கடந்த பாதை கடந்தது தான், அதில் ஓர் முறை நாம் மூழ்கி எழுந்தோம் ஆனால் அடுத்த முறை மூழ்கும் போது புது வெள்ளமே நம்மை அணைக்கும், புதிது, புதிதாய் ஓடிவந்து நம் அழுக்கை எல்லாம் களைந்து செல்லும். இறைவனும் அப்படித்தான், ஒவ்வரு முறை அவனை நினைந்துருகி நிற்கும் போதும் புதுமையாய் இன்பம் தருவான், அதுவும் பேரின்பம். எந்த நேரம் நினைந்துருகினாலும் புதியதோர் இன்பம். இறைவனை நினைந்த நெஞ்சில் அவன் அருளால் ஆணவம் எனும் அழுக்கு களையப்படும்.
                 ஆற்றின்ப வெள்ளத்தில் மூழ்கும் ஆனந்தம் அலாதி, அது தன்னை  மறந்த ஆனந்தம், நாமும் ஓர் குழந்தையெனவே உள்ளம் துள்ள நிர்மலமான ஆனந்தத்தை அனுபவிக்கும் நிலை. மூழ்கும் நேரம் மூச்சு அடக்க வேண்டும்,உள்ளே மூழ்கும் கணம் தயக்கம் வருவதும் இயற்கை, அதை கடந்து  லயித்து மூழ்க , அங்கேயே நின்றிருக்க ஆவல் வரும், நேரம் கடப்பதும்  தெரியாது.
              வற்றாத ஜீவ நதிகள் நிறைந்த நம் நாடு, தற்போது காய்ந்துப் போன நதிகள் தென்பட்டாலும்,மணல் கொள்ளையால் உரு  மாறி நின்றாலும் என்றும் ஈரம் நிறைந்திருக்கும். இறை நம்பிக்கை என்பதை மறுத்து ஆயிரம் கருத்துக்கள் வந்தாலும், ஓடிவரும் ஆற்றின்ப வெள்ளத்தை நாம் அறியாது போனதே நமக்கான கேடு, ஆயினும் பாரதம் ஆண்டாண்டு காலமாய் ஆன்மீகம் தழைத்த பூமி ஆற்றின்ப வெள்ளத்தை நாம் என்றேனும் அனுபவித்தே உய்யவடைவோம் .

வாக்கும் நோக்கும் -1

வாக்கும் நோக்கும் -1
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
                                                                                    -திருவாசகம் 

அருவும், உருவும், அருவுருவம் தாங்கி நிற்கும் இறைவனை துதிக்க பற்பல வாக்குகள் உண்டு. அதில் மணிவாசகர் திருநா உதித்த இந்த திருவாசகம் பல நாளாய் என்னுள் உழன்று ,உணர்வில் கலந்து பலவாறு நிறைந்துள்ளது என் சிந்தையில்.

"அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே" , இதனினும் அழகாய் இறைவனின் இருப்பை உணர்த்தும் வாக்கு ஏதேனும் உண்டோ !

இறைவன் அறிவே வடிவானவன், ஞானானந்த மூர்த்தி, அஞ்ஞானம் என்பது எதுவென்று அவன் அறியான் ஏனெனில் அவன் அறிவே வடிவானவன். பதியை பற்றி நிற்கும் பசுவாகிய நாம் தான் அறிவித்தால் அறியும் அறிவு பெற்றவர்கள். அறிவித்தால் அறியப்படும் எனும் போதே அங்கே அஞ்ஞானம் நிறைந்து உள்ளது என்பதே பொருளாகும்.
ஆகவே அஞ்ஞானம் நம்மை சார்ந்தது, அதனை அகற்றி மெய் ஞானம் புகட்டுபவனே இறைவன். 

அஞ்ஞானம்- என்பதின் பொருளில் நம்மிடையே எவை எல்லாம் உண்டு என்ற கேள்விக்கு பதில் என்பதன் பட்டியல் நீண்டு நிறைந்திருக்கிறது. நம் மனம், செயல், வாக்கு ஆகியவற்றால் எண்ணற்ற வினைகளை செய்கிறோம், இதில் அத்தனையிலும் அந்த  நொடியில் சரியெனப் பட்டத்தை அறிவுள்ள செயல் என்றே செய்கின்றோம், அதன் பின் விளைவில் அல்லது ஆராய்ந்த பின்னே, சமய சந்தர்ப்பம் கிடைத்து நாம் உணர்ந்தப்  பின்னே அதில் உள்ள பல பிழைகள், அஞ்ஞானம் நமக்கு தெரியவருகிறது.
                      நம்மால் உணரப்பட்ட அஞ்ஞானம், உணரப்படாத அஞ்ஞானம் , என்றுமே உணர்த்தப்படாத அஞ்ஞானம் என இதுவும் வகைகள் அதிகம். சமய சந்தர்ப்பங்கள் பிழைகளை உணர்த்தலாம், என்றேனும் ஆத்ம தரிசனம் பெற்றால் அங்கே நிறைந்திருக்கும் அஞ்ஞானம் அகற்றப்படலாம், அதனினும் உற்று நோக்கினால் அவனும், அவனியும் புலப்படலாம் , அதுவரை நிலவிய அஞ்ஞானம் அகற்றப்படலாம். மறைந்து நிற்கும் ரகசியங்கள், புலப்படாத ஞானம், உணரப்படாத உணர்வுகள், உணர்த்தப்படாத வினை பிழைகள் யாவும் அஞ்ஞானம். 

                        அஞ்ஞானம் என்னும் இவற்றை எல்லாம் அகற்றும் ஆற்றலை நாம் இறைவன், பரமம் ,பிரம்மம், சிவம் என்கிறோம். ஞானமார்க்கிகள் யோக வழியில் ஞானம் என்கின்றனர், பக்தி வழியில் அதை சிவம் என்கிறோம், பகுத்தறிவாளர்  என பெயரிட்டுக்கொள்ளும் மனிதர் மட்டும், நல்லறிவு தான் இறைவன் என்பதை பகுத்தறிய மறுத்து, இறை என்பதையும் மறுத்து அஞ்ஞானம் என்னும் கட்டில் பிணைந்துள்ளனர்.

                       அஞ்ஞானம் எனும் இருள் மறைந்து, நல்லறிவாகிய இறைவனின் ஒளி நிறைந்தால் உலகில் குற்றங்களும்,துன்பங்களும், துக்கங்களும் அகலும். அஞ்ஞானம் அகல என்றும் அவன் அருளை பெற பிரார்த்திப்போமாக!
                          

Monday, 23 May 2016

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை 

பாடங்கள் நிறைவதில்லை 

படிபினைக்கும்  குறைவுமில்லை 

பட்டாலும் பயனுமில்லை 

சுட்டாலும் உறைப்பதில்லை 

கற்றதே கையளவு எனில் 

கரை கண்டார் யாருமுண்டோ 

கற்றதெல்லாம் விட்டாலே 

வீடுபேறு கிட்டுமென்றால் 

கற்பதும் கடப்பதும்  எக்காலம் !

**********************************
கண் பார்க்கும் ,செவி கேட்கும் 
அதரம் உதிர்க்கும் சொற்களை 
ஐம் புலனும் அதன் வேலையில் 
செவ்வனவே செய்திருந்தும் 

சில நேரம் சில பொழுது 
சுற்று புறம் ஸ்தம்பிக்க 
பார்ப்பது எது பார்வையில் எது 
கேட்பது எது உரைப்பது எது 
என சித்தம் பிரம்மை வயப்பட 
மனம் மருண்டு மயங்கி  நிற்க...

ஒரு நொடியில் சுற்றில் ஓர் ஒலி 
சுய உலகில் இழுத்து வர 
எதை நோக்கிய பயணம் என்றறியா இது 
இருந்தும் , இருப்பில் உள்ளதை பற்றி 
இயைந்தே செல்லும் இது! 

தீபா செண்பகம் 

Sunday, 14 February 2016

நவரசக் கவிதை

நவரசக் கவிதை 
1.கோபம் 
எனதும்,உனதும், உலகிதும் ஆன
இயலாமையின் இயல்பான வெளிப்பாடு 
எதையோ மாற்றத்துடித்து 
இயலாது  வந்த துடிப்பின் வெடிப்பு 
ஏதேனும் செய்வோமோ எனும் 
எண்ணத்தின் பிரதிபலிப்பு 
எதையோ செய்துவிட்டு பின் 
அணுவணுவாய் அதன் தவிப்பு 

உடல் நடுங்கும் சிலவேளை 
ஓங்கி ஒலிக்கும் குரல்வலை 
கண்கள் சிவக்கும் பளபளப்பில் 
காய்ந்து வடியும் கண்ணீரும் 
நெஞ்சம் கொதித்து தகிக்கும் 
அடிவயிறும் அலறும் 

நரம்புகளின் புடைப்பும் 
வார்த்தைகளின் தடிப்பும் 
கண்களின் எரிப்பும் 
நிற்கட்டும் ஓர்கணம் 
குணத்தோடு உரையாடி 
கோபத்தை ஜெயித்திடுவோம் 
**************************************************************
2.அச்சம் 
அச்சம் இல்லை அச்சம் இல்லை 
எனப் பாட நான் ஒன்றும் 
முண்டாசுக் கவி பாரதி இல்லை 

ஒன்றை பெரும் விருப்பும் 
அதை தொலைப்பேனோ எனும் 
அச்சம் கொண்ட பாவை தான் 

ஒளி மறைத்த இருளும் 
எனை ஆட்டிப் படைக்கும் 
ஓராயிரம் கற்பனையாய் 
வந்து வாட்டி வதைக்கும் 

ஓரறிவு உயிர் முதலாய் யாவும் 
ஆறறிவு படைத்த  என்னையும் 
வகை வகையாய் பயப்படுத்தி 
எள்ளி நகைத்திருக்கும் 

அறிவற்ற ஜடப் பொருளானாலும் 
 அன்னம் ஆக்கி தரும் பாத்திரமும் 
பிகிலடித்து ஓர் நாள் சோறு வீச 
அனுதினமும் மிரட்டி திகிலடிக்கும் 

நிதர்சனமாய் வரும் நிகழ்வுகளும் 
அவ்வப்போது வரும் கனவுகளும் 
ஆற்றாமையாய் வரும் துன்பங்களும் 
மிகை படுத்தி திகைக்க வைக்கும் 

இத்தனையும் அகத்தில் வைத்திருக்கும் 
எக்கணமும் அதில் லயித்திருக்கும் 
திக்கற்ற பாவைக்கு எங்கிருந்து வரும் 
பாரதியின் அச்சம் இல்லை எனும் பாட்டு

திரைக்குப் பின்னால் சென்று பார் 
தெளிவு பிறக்கும் ,பற்றற்ற பாசம் வை 
பரமன் மேல் பாரம் சுமத்து -அச்சம் 
அஞ்சி ஓடும் என்கிறது ஓர் குரல் 
 **************************************************************
3.நாணம் 
பெருமை சேர்க்கும் வண்ணம் 
பெண்ணவளின் ஆபரணமாய் 
அலங்கரிக்கும் தேவதையாய்  நீ 

முகமறியா அன்னியர்முன் 
முதல்முறையாய் வந்துநிற்க 
நானிக்கோணும் குழந்தையாய் நீ 

செய்யாதை  செய்ததனால் 
வேடிக்கையாகிவிட அதில் 
அசட்டுப் புன்னகை சிறுவனாய் நீ  

குச்சுக் கட்டில் குடிபுகுந்து 
மற்றவரை பார்க்க மறுக்கும் 
மஞ்சள் வண்ணப் பாவையாய் நீ 

அரும்புமீசை முளைக்கும் போது 
அடுத்த வீட்டு அழகி முன்னே 
பார்வை தவிர்த்த காளையாய் நீ

கடைக்கண் பார்வை மைவிழியில் 
மயங்கி நிற்கும் அக்கணத்தில் 
தவித்து நிற்கும் காதலர்களாய் நீ 

பெரும் புகழும் தலையில் ஏற 
முகஸ்துதியாய் அவனைப் பாராட்ட 
வென்ற தலைவன் முகத்திலும் நீ 

மனம் முடித்த மங்கையின் 
திருவற்றில் பந்தம் தாங்க 
தம்பதியின் பூரிப்பிலும் நீ 

அசட்டுதனமாய் மாட்டிக்கொண்ட 
அரசியல்வாதியிடம் மட்டும்  
அகப்படவே மாட்டாயோ நீ 
**************************************************************
4.பெருமிதம் 
நான் மறையும் நீதி நெறியும் 
பிறந்த நாடு இதுதான் 
காவியின் மகத்துவம் தியாகம் 
என்பதை உணர்ந்தது தான் 

களப்பிரர் காலம் முதல் 
களவாடி கூட்டம் வரை 
பல சோதனைப் பொழுது 
வேதனையுடன் கடந்தது தான் 

ஆதிக்க சக்திகளின் கையில் 
செய்வதறியா குலமகளாய் 
தன்மானம் காக்க தவிப்புடனே 
நிர்கதியாய் நின்றது தான்  

ஆயினும் அன்னையின் துகிலை 
ஆதரவாய் ,மதிப்புடனே காத்திட 
தவப் புதல்வர்கள் பலர் பிறந்திட 
தன்மானம் காத்து நிமிர்ந்தது தான் 

இமயம் முதல் குமரிவரை 
ஒன்றெனவே இணைந்தது தான் 
பலமொழி பேசித் திரிந்தாலும் 
இந்தியன் என உணர்வது தான் 

பிறந்த பொழுதினும் சிறந்த தருணம் 
மூவர்ணம் தாங்கிய என் நாட்டுக் கொடி 
பட்டொளி வீசி பார் புகழ வின்னளவில்  
பெருமிதமாய் என்றும் பறப்பது தான். 
**************************************************************
5.உவகை 
மலடி என்ற பட்டம் நீக்க 
என் உள்ளிருந்து உதைத்த 
நின் பிஞ்சு மலர்ப்பாதம் 
விஞ்சி நிற்கும் உவகை 

எச்சில்  வழிந்தோட மழலை  
சாரல்  மழைப் போல் பொழிந்த 
நின் அதரம் சொட்டிய நின் 
அம்மா எனும் சொல் 

பள்ளி படிக்கவென நின் 
பிஞ்சு விரல் தொட்டு 
வகுப்புவரை உன்னை 
விட்டுவந்த பெரும் உவகை 

சிறந்த மகன் இவன் என 
ஊரார் உன்னை போற்ற 
பெற்ற பொழுதினும் மிக்க 
பெருமையாய் பேருவகை

மணந்தவர் மன்னவ்ராயினும் 
நாடாளும் நாயகன் ஆயினும் 
என் பிள்ளை கொண்ட வெற்றி 
எத்திக்கிலும்  சொல்லும் உவகை 

புருசர்களில்  உத்தமனாய் உயர் 
ரகு குல ராமனைப் போல் நீ 
உயர்ந்து நிற்கும் நாளை காண
ஏங்கி நிற்கும் எதிர்பார்ப்பிலும் 
உண்டு மட்டில்லா எனது உவகை.
**************************************************************
6.வெகுளி

நாலுப் பிள்ளைப் பெற்றவள் 
நயமாய் வளர்க்கத் தெரிந்தவள் 
கூட்டும் குழம்பும் பொங்கி 
கூட்டுக் குடும்பம் நடத்தி 
சலவைத் தொழிலும் செய்து 
சமரச வாழ்வை நடத்தியவள் 

கணவன் ஓர் புறம் நழுவ 
நாத்தி ஒருபுறம் இடிக்க 
மாமி ஒருபுறம் சலிக்க 
மாமனின் கோபமும் பொறுத்து 
நான்கு பேருக்கும் நயந்து 
நல்லவள் எனப் பேறேடுத்தவள் 

சம்சார சாகரம் எனும்  கடலில் 
எதிர் நீச்சல் அடித்து நிமிர்கையில்  
ஆயுள் கணக்கில் அறுபதும் முடிந்து 
நரை முடியும் தளர்ந்து விழுந்து 
தனக்கென ஓர்  வாழ்விருப்பதை 
என்றும் அறியாதவளே  வெகுளி!
**************************************************************
7.இழிவரல் 

ஈயென இரத்தல் இழிதன்றாம் 
ஈயேன் என மறுத்தல்  இழிதாம் 
ஆயிரம் ஆண்டுகள் முன்னே 
புறநானூறு தந்த மதிமொழி இது 

நிலமும்,நீரும்,காற்றும்,ஒளியும் 
உழவர் தம் உழைப்பும் சேர்ந்து 
உபரியாய் உணவை அளித்தும் 
பசிய வயிறு குழிந்து இருத்தல் 

மானிடம் மடிந்து சுயநலம் பெருகி 
அன்னசாலைகள் அனைத்தும் மூடி 
இலவச அரிசியும் விலைப் பேசி 
அற்ப மானிடர் உலவுதல் இழிதாம் 

கோனும் குடியின் நன்மை கருதா 
மானியம் என்னும் நேயம் குறைத்து 
வியாபாரம் செய்யும் சந்தையாய் 
அரசினை நடத்தல் அதனினும்  இழிதாம்  
**************************************************************
8.அமைதி 
மண்ணில் வந்து பிறந்து விட்டோம் 
மாயையின் கைகளில் அகப்பட்டோம் 
ஆடும் வரை ஆட்டம் 
ஓடும் வரை ஓட்டம் 

வாழ்க்கை என்னும் பெரும் கடல் தான் 
வாழ்வும் ஓர் பெரும் சுமை தான் 
அஞ்சுவதில் அஞ்சி நின்று 
கெஞ்சி கூத்தும் ஆடி நின்றோம் 

போகும் வழி இது தான் என்றே தொடங்கி 
பாதி வழியில் பாதை மாறி நின்றோம் 
மாறிய பாதை அறியாது 
வெகுளியாய் முன்னேறினோம் 

வழிப்  பயணம் கடினம் தர வாடி நின்றோம் 
வழித் துணையை மனதில் நாடி நின்றோம் 
நம் இழிவுகளை நாமே சகித்து 
மனதினை நல்  வழியில் திருத்தி 

ஆட்டம் ஆடும் அகத்திணை நிறுத்தி 
சஞ்சலம் பேசும் மனதை அடக்கி 
திடம் கொண்ட சித்தத்துள் சிவம் நிறைத்து 
அமைதி எனும் அருள் பெறுவோம்.

புன்னகை

புன்னகை

மனம் மகிழும் தருவாயில்
அகம் மலர்ந்து அவதரிக்கும்
அதரம் சிந்திய முத்து புன்னகை!

அழுது பிறந்த உயிர்கள் மகிழ
படைத்தவன் தந்த பரிசு,பல்
வரிசை தெரிய விரியும் புன்னகை!
அரும்பின் கனவில் ஆனந்தம்
மறை பொருளாய் நின்ற மாயன்
தந்ததோ பச்சிளம் புன்னகை!
சுற்றம் பழகி சொந்தம் பழகி
வேடிக்கை விளையாடி விளைந்ததோ
செல்லக் குழந்தை குதூகலப் புன்னகை!
தானே ஆடித் திரிந்து ஓடி மகிழ்ந்து
தோழியர் சூழ ஆனந்த ஆட்டம்
இயல்பாய் வந்ததோ பதின்மப் புன்னகை!
கண்ணாளன் காண காணாது மறைந்து
காணாத பொழுது கண்டு நெகிழ்ந்து
கனிந்து வந்ததோ கன்னிப் புன்னகை!
மணம் புரிந்து கலவித் திரிந்து
அகநானூறும் பயின்று நாணி
நயமாய் விரிந்ததோ நங்கையர் புன்னகை!
தாய்மை சுமந்து தளர்ந்து அமர்ந்து
தானே பிளந்து வலித்துப் பெற்று
பிள்ளை முகம் காணுமோ தாய்மையின் புன்னகை!
இல்லறம் நடத்தும் நல்லறத் துணை அவள்
இன்பம் துன்பம் யாவும் கண்டு
என்றும் மாறாததோ தைரியப் புன்னகை!
தளர்ந்த வயதில் தள்ளாது நின்றாலும்
கைதலம் பற்றியவர் தோள் கொடுத்து
துணையாக வந்ததோ அனுபவப் புன்னகை!
கைலாயம் நோக்கி காத தூரம் பறந்த போதும்
உயிர் தாங்கிய மேனியில் உறைய விட்டு
மாறாது நின்றதோ அந்த சாந்தப் புன்னகை !
எம் மங்கையர்க்கு அணி சேர்க்க
பொன்நகை தேவை இல்லை
இப் புன்னகையே போதுமடி !

உலகம் நம் கையில்


உலகம் நம் கையில்

ஆதி நாயகன் அருட்பெரும் கருணையில்
அணுவணுவாய் விரிந்து அண்டம் ஆனது
அதனில்பல பிண்டம் உருண்டு உருவானது
சுழன்று சுற்றி உயிர்கள் வாழும் உலகானது

பஞ்சபூத சேர்க்கையில் பரிணமித்த உலகிது
பரிணாம வளர்ச்சியில் பாந்தமாய் அமைந்தது
வளங்களும் நலன்களும் பூரணமாய் நிறைந்தது
மனித சமுதாயம் பாங்குடன் சிறப்புற வாழ்ந்தது

இயற்கையின் கொடையில் இன்பப் பெருவாழ்வு 
இதுமட்டும் போதுமென்றால் இன்னல்கள் ஏது
மூவித குணங்களும் நவரசம் நிறைந்த உலகிது
தினையோடு சேர்த்து வினையும் விதைத்தது

செய் கர்ம பலனது பலவாய் விளைந்தது கடுமையாய் 
மாயோன் திருவாய் உமிழ்நீரில் உருண்டும் என்ன
தசாவதாரம் புரிந்து அவன் வினை முடிக்க முயன்றும்
தற்காலிக பலனாய் தற்சமயம் தரணியைக் காத்தது

மது,மாது,மதம் எனும் மாயையின் பிடியில்
மனிதம் மறந்த மனிதர் தீவிரவாதம் வளர்க்க
நாளொன்றும் தீயன தவிர்த்து நன்மை பெறப்
பிரம்ம பிரயத்தனம் கொண்டு உருளுது உலகு

பெரும் மழையும், பேரழிவும் சாகாத மனிதம்
உண்டெனப் பறை சாற்ற ,சிறிதே ஆசுவாசம்
உலக உருண்டை நம் கை வலையில் உண்டு 
விரிப்போம் அதனை அவனியைக் காத்திட

என் குடும்பம் ,உறவு,இனம்,மொழி மதம்
மாநிலம்,நாடு கண்டம் எனும் கட்டுக்கள்
உடைத்தெறிந்து பூமித்தாயின் நன்மக்கள்
எனும் அகண்ட சிந்தனையில் இணைவோம்

சிந்தனை ஒன்றுபட மனவலிமை பிறக்கும்
மனம் உறுதிப்படச் சகோதரத்துவம் மலரும்
சண்டையும் சச்சரவும் காத தூரம் ஓடும்
 மனிதம் காத்து  சகோதரத்துவம் வளர்ப்போம்
 வாரும் வாரும் உலகம் நம் கையில்