சாகேத் நகரம்,பரந்த பாரத தேசத்தின் தலை நகரமாய்
புண்ணிய ராமனின் பிறப்பிடம் என்ற பெருமை கொண்டதாய்
சகல கலைகளும் செல்வங்களும் வளங்களும் பெற்றதாய்
சிறந்து விளங்கும் விண்ணோரும் வியக்கும் உன்னத நகரம்!
அயோத்தி நகரம் அன்று பூர்ண அலங்கார பூஷிதையாய் திகழ்ந்தது
நகர மக்கள் என்றும் காணா ஆனந்தம் நிறைந்து மலர்ந்திருந்தனர்
இளவல் என்ற சொல்லுக்கு விசேச அர்த்தம் தந்தவன் வீர லட்சுமணன்
தன் மாளிகையில் கோலமயில் ஊர்மிளையின் மஞ்சத்தில் இருந்து
தான் கண்ட காட்சிகளை பகிர்ந்து நாளை நிகழும் நிகழ்வதனை
பட்டாபிஷேகம் ஏற்கும் கோமகனை புகழ்ந்து இந்நாடு செய்த
பாக்கியத்தை போற்றி ரகுவம்சம் நீதி நெறி தனை புகழ்ந்து அத்தோடு
நடுநடுவே தன் அங்கமென வந்தவளின் பார்வையில் நிலை கொண்டு
ஒருவர் மாறி மற்றொருவர் பரிகசித்து கொஞ்சுமொழிகளில் பேசி
அந்தி சாயும் பொழுதில் சகோதரர்களை சந்திக்க வென சகியிடம்
பிரியாவிடை பெற்று பிரிந்தான் ஊர்மிளையின் பதியாய் மண்ணுலகில்
வந்த ஆதிசேசன் அவன் வீர ரூபத்தை பார்த்து மகிழ்ந்து நின்றனள் மாது.

No comments:
Post a Comment