Tuesday, 2 June 2015

பக்தி மோகம்-2

ஒன்றின் மேல் இருக்கும் ஈர்ப்பு மோகம் அந்த 
ஈர்பினால் தொடரும் செய்கை மதி மோகம் 
புட்பதத்தன்  பக்தியில் பிழையில்லை அழகிய
மலரெல்லாம் அப்பனுக்கு என்றதும் பழுதில்லை 
பரமனுக்கு படைக்கும் உடைமை தன் முயற்சியில் -10

உருவானதாய் அல்லாவிடினும் அதற்க்கு ஈடான 
தன் பொருள் ஈந்து தருவித்ததாய் இருத்தல் வேண்டும் 
புட்பம் கொய்தவன் அதை விதைத்தவன் அல்லன் 
விலை பேசியவனும் அல்லன்,சிவபூஜை மலருக்கு 
மோகம் கொண்டு மாயம் செய்து களவாடியவன்-11 

அவனிக்கு அறிவிக்க பக்தியில் குறை தவிர்த்து 
உயிர்கட்கு உபதேசிக்க அம்பலவாணர் கூத்து அது 
சித்ரரதன் அரண்மனையில் சிக்கினான் கந்தர்வன் 
கள்வன் என கண்டித்து விசாரணை மண்டபம் கூடியது 
பூ கொய்தல் குற்றமென கொற்றவன் கொக்கரிக்க -12

ஈசனுக்கு அர்ப்பிக்கும் மலர் கை எதுவாய் இருந்தால் 
என்ன என வினா எழுப்ப தன் சிவபூஜை மலர் கவர்ந்த 
கந்தர்வனை சிறைக்கூடம் செல்ல ஆணையிட்டான் 
மாயமாய் மறையும் வித்தையும் அதிசயசக்தியும் மறைய 
தான் செய்தது தவறோ என அயமுற்றான் புட்பதத்தன் -13

சிந்தையில் சிவத்தை நிறைத்து அற்புத இசையை 
மீட்டி அமுத கானம் புணைந்து தேவகானம் பாடினான் 
அவனி முழுதும் அதிர்ந்து பக்தி ரசத்தில் மிதந்து இனிய 
கந்தர்வ கானத்தில் கவர்ந்து கட்டுண்டு சிலையாய் நின்றது  
சிவ மகிமை  ஸ்தோத்திரம் சிறப்பாய் அவனியில் அவதரித்தது-14 

பதிகம் பாடிபக்தி செலுத்தி தான் சிவபக்தன் எனஅகிலம் 
மெய்பித்த புட்பதத்தனின்  முன்னே மன்னவன் நின்றான் 
கண்கலங்கி உரோமம் சிலிர்த்து தன் உணர்ச்சி பெருகி 
உம்  சிவ மகிமை கானம் செவியுற யாம் முற்செய்த 
பாக்கியம் என்ன என பக்தியுடன் பணிந்து நின்றான்.-15

பக்தன் பாடும் கானம் பதியை பரவசப்படுத்த அவன் 
மோகம் விடுத்து பக்தியின் நிலையான நிலையை 
உணர்த்தி பக்திக்கு தேவை தூயமன  அர்பணிப்பு 
பருப்பொருள் வடிவாய் வந்த ஆடம்பரம் அல்ல என  
எடுத்துரைத்து ஈசன் தம் திருவிளையாடல் புரிந்தார்.-16

புட்பதத்தன் அகம் மகிழ்ந்தான் ஆனந்தம்  அடைந்தான் 
சித்ரரதன் தான் கண்ட சிவதரிசனம் கந்தர்வனால் தாம் 
தமக்கு கிடைத்த பேரு என்று பெரும் உவகை கொண்டு 
நன்றி பகர்ந்தான் ,கந்தர்வனை விட்டு மறைந்த மாயங்கள் 
மீண்டும் அவனிடம் அடைக்கலம் புக புகையாய் மறைந்தான் -17

சிவ மகிமை கானம் பாடி தாமே சிறந்த சிவபக்தன் என 
கர்வம் கொண்டு ஆனந்தமாய் வலம் வர தன் பதிகத்தை 
தானே புகழ்ந்து பாடி திரிய ,இறைவனார் எதிர் வந்தார் 
தம் ஆலயங்களில் வீற்றிருக்கும் நந்தியின் திருவாய் 
திறந்து உள் நோக்கி வந்து தமை சந்திக்க ஆணையிட்டார் -18

மதி கலங்கிய கந்தர்வன் நந்தியின் இருப்பிடம் நோக்கி 
விரைந்து எம்பெருமான் ஆணையை சொல்ல அவர்தம் 
உள்ளத்து விருப்பை உணர்ந்த நந்து திருவாய் மலர 
அவரின் பற்களில் பதிந்து இருந்தது பதிகம் யாவும் 
ஆணவம் அழிந்து அறிவு பெற்றான்  புட்பதத்தன் -19

ஈசனார் திருப்பாதம் பணிந்து செய்த தவறை ஒப்புகொள்ள 
அவனியில் இயற்றும் அத்தனை படைப்புகளும் முன்னரே 
இயற்றப்பட்டவை ,அதை அரங்கேற்றும் கருவி மட்டமே நீவீர் 
என இறைவனார் எடுத்துரைக்க பத முக்தி வேண்டி நின்றான் 
ஆணையாய் பிறப்பெடுத்து அடைவாய் முக்தி என்றார் -20

ஆனையும் சிலந்தியும் என்ற அடுத்த பதிப்பில் புட்பதத்தன் அடுத்த பயணம் தொடர்வோம்.

No comments:

Post a Comment