Tuesday, 26 May 2015

பிச்சி மகள்

  

 பிச்சி மகள் 

அவளைப் பார்த்தது பல வருடங்கள் முன்பு 

பதிந்தது அந்த உருவம் பசைபோல் மனதில்

வீதியில் வலம் வரும் அநாதை -அபலை அவள் 

மானம் காத்துக் கொள்ளவும் மதியில்லா மங்கை !

 

கிழிந்த ஆடையில் மகிழ்ந்து திரியும் நங்கை 

சுற்றித் திரியும் விழிகளில் - திக்கற்ற பார்வை 

பசிக்கு உணவுப் பாதையிலிருந்தாலும்  போதும் 

படுத்து உறங்கக் கோவில் மரத்தின் மேடை! 

 

வினைப் பயனாய் வீணே சிரித்து விருந்தானாள் பேதை 

ஒருநாளில் ஓராயிரம் முறை பூனை நடை பயில்வாள் 

அந்நகர் வீதிகளை நடையாய் நடந்து அளந்து சலிப்பாள்

அப்பகுதி மக்களுக்கு அவளும் ஓர் அசையும் அடையாளம் !

 

தினமும் திரிவதால் மிச்சம் சொச்சம் போட்டு 

காட்சிப் பொருளாய் கண்டு கதை பேசும் பொருளாய் 

ஒரு சீவன் உண்டு என்ற வரையில் பரிட்சயம்

மாதங்கள் உருண்டோட அவளிடம் ஒரு மாற்றம் !

 

பிறை நிலவாய் வளர்ந்தது அவள் வயிறு -மேடிட்டு 

அப்பகுதி அம்மணிகளின் மனம் அதிர்ச்சியுற்றது! 

பிச்சியையும்  விட்டுவைக்கா பேதைமை உலகம்

தன் காம இச்சைக்குக் கெட்டழியும் கயவர் உலகம் !

 

தன் மதி அறியாதவளைத் தாயாக்கிய பாதகர் நிறை 

அயோக்கிய ஆடவர் உலகம் அடுக்குமோ இது !

அப்பனே அவனவனுக்குத் தக்க தண்டனை தாரும்

நீதியரசாய் நின்று நெற்றிக் கண்ணால் சுட்டெரியும் !

 

பிள்ளை வரம் வேண்டி தவமிருக்கும் தம்பதி பலரிருக்க 

அனாதையாய் திரியும் பிச்சி வயிற்றில் பிள்ளை வரம் !

பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்தாள் ஓர் பெண் மகவு 

கன்றுதனை ஈண்ட பசுவும் பாசம் வைக்கும் குட்டியிடம் !

 

அந்த ஐந்தறிவும் இன்றி அலைந்தால் அந்த பிச்சி 

ஏற்றி நின்ற கருவையும்  புரிந்தால் இல்லை !

இறக்கிவைத்த மகவையும் அறிந்தால் இல்லை!

வழக்கம் போல் சில தினம் சென்று வீதி வழிப் பயணம் !

 

பிரசவம் பார்த்த செவிலி பிள்ளை வரம் வேண்டி நின்ற 

ஓர் தம்பதியிடம் சேர்பித்து தன் கடனை நேர் செய்யப் 

பிச்சி மகள் என நதிமூலம் மறைந்து நற்குடி பிறப்பாய் 

நற் பெற்றோர் நல் மகளாய், 

ஊற்று- நீராய் வளர்கின்றாள் ,

பிச்சி மகள் !



எம்டன் மகள் எழுதும் உரை,

எம்டன் மகள் எழுதும் உரை,
மண்ணில் வந்து பிறந்தோம் நற் பெற்றோருக்கு மகளாய்,
வித்தாய் மடியில் வீழ்ந்த எமை முத்தாய் பிறப்பித்த எம்
தாய் தந்தையர்க்கு என்றென்றும் அன்புடன் ஓர் அஞ்சலி
ஆசையுடன் பெற்றெடுத்து அன்புடன் வளர்த்து விட்டு
ஆதிசிவன் வளர்திடுவான் என்று வானம் நோக்கி சென்றீரோ
வாழ்ந்த வாழ்க்கை போதுமென்று வந்த கடன் தீர்ந்ததென்று தம்
பிள்ளைகளை சமயபுரத்தாள் வாழ வைப்பாள் என்று நினைத்தீரோ

அன்னையவள் நெய் உருக்கி அமுதம் படைக்க,அதனை பக்குவமாய்
பிசைந்து பகிர்ந்தளித்த அப்பாவின் பிடி சோறு இன்றும் நாவில் சுவைதருதே.
அம்மா சுட்டு தந்த தோசைகளை வாங்கி வைக்க பொறுமையின்றி போதுமா
போதுமா என கேட்ட சிறுபிள்ளை இன்று போதுமென்று நீர் சொல்லும் வரை
வார்த்து தர காத்திருந்தாலும் வரமாய் கூடஅந்த சுகம் பெற இயலாதே.

தீபவொளி திருநாளில் புது உடை போட்டுவிட்டு ,வெடி வெடிக்க திரி கிள்ளி தந்து,
பட்சணங்கள் தந்தவரே,வான வெடி வெடிக்க சென்ற என் விரல்கள் எல்லாம்
வெந்துவிட அதற்க்கு மருந்திட்டு உம் வாயினால் பொழுதெல்லாம் ஊதிவிட்ட
அந்த புகை கலந்த நெடி என்றென்றும் எம் நினைவில் நிறைக்குதையா.

நான் பூப்புனித நீராடி தாவணி போட்ட நாளை நீர் பார்க்கவில்லை,
மணமாலை நான் சூடி மணவாளன் கரம் பிடித்ததை காணவில்லை,
முன் வயிறு தள்ளி உம் பெயரன்,பேத்தி சுமந்ததையும் நோக்கவில்லை,
பிரசவ வலி கண்டு என் மகவுகளை பெற்றெடுத்த நேரமும் அருகில் இல்லை.

ஊரார் பிள்ளைஎல்லாம் உம் சிரம் மேலே கரம் கோதிவிளையாட விட்டவரே,
எம் பிள்ளைகள் விளையாட தொப்பையையும்,மடியையும் தாராமல் எங்கே
மறைத்து எடுத்து சென்றீரோ? உமக்கு காலில் நோவு வந்தால் மிதிக்க உம்
உடல் எல்லாம் நடமாட பெயரன்,பேத்தியர் ஐவர் உண்டு இப்போது.வருவீரோ?

எல்லாம் வல்லவன் இறைவன் என்றால் ,எமக்கு நீர் தானே இறைவனை இருந்தீர்
அந்த நம்பிக்கையை சிறுபிராயத்திலே உடைத்து எம் வயிறெல்லாம் கலக்க வைத்தவரே
இருபத்தும் ஓர் நான்கும் கடந்து வருடங்கள் ஆனாலும் இன்னும் அந்நாளே கரிநாள்.

பள்ளி செல்லும் பொது கால்மேல் காலிட்டு காசுதந்து விட்டு ,திரும்பி வருகையிலே
பக்குவமாய் பாரதியார் புத்தகம் படிக்கும் பாவனையில் மூலையில் அமர்ந்திருந்தீரே
எவரிடமும் அஞ்சாத,எல்லா திறமைகளும் கொண்டு எம் தாத்தனிடம் எம்டன்
என்று பெயர் பெற்றவரே ,எமனை ஏமாற்றும் கலை மட்டும் என்ன கற்கவில்லை?
அதுவும் எமன் செய்த சதியாக இருக்கும்,முன்னே சென்ற என் பெரிய அன்னையின்
சுலோச்னமானா முகம் காட்டி,உமை பாசக் கயிற்றால் இழுத்திருப்பான் சதிகாரன்.

அங்கே உமக்காக ஓர் நங்கை காத்திருக்க,இங்கொரு நங்கையை விட்டு சென்றவரே
அவள் ஒருத்தி உமக்கு போதாதோ ஈன் இன்னொருவளையும் அழைத்து கொண்டீர்.
வள்ளி தெய்வானையுடன் நீர் பாலசுப்ரமனியனாய் நீர் வீற்றிருக்க ஆசை கொண்டாயோ
போகட்டும்,தந்தையாய் ஓர் தமையனை தந்துவிட்டு அகன்றுகொண்டீர் என இருக்க
அவனையும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டவிட்ட ஈசனிடம் வம்பு செய்வீர் மறவாமல்
பட்டி விட்டு வழிமாறி சென்ற மேய்ப்பார் இல்லாத ஆடுகளை மேய்த்து கொண்டு வந்து
பட்டியில் அடைத்து ஒரே தொட்டியில் தண்ணீர் அருந்த வைப்பதுவும் உன் கடனே
மேலுலகம் சென்றாலும் நம்மிடையே இடைவெளி இல்லை என்றும் நீர் எமுடனே
பரமனிடம் பக்குவமாய் எடுத்து கூறும்,அவன் பத்தினியிடம் அழுது முறையிடும்
உன் உற்றாரும்,சுற்றாரும் என்றும் சுகமாய் வாழவேண்டும் என்றும் நம் கொடுமை
இனி ஒருவரும் அனுபவிக்க வேண்டாம் என்றும் தம்பதியராய் சென்று வரம் கேளும்.
                                                                                                                                      இப்படிக்கு
                                                                                                                                   எம்டன் மகள்.

ஆதி கடவுள் கையில் ஆராவமுதன்.

ஆதி கடவுள் கையில் ஆராவமுதன்.


நீல வண்ணனை தாங்கி நிற்கும் நீலகண்டன்.
அலைமகள் நாயகனை அள்ளி நிற்கும் மலைமகள் நாயகன்.
கண்ணனுக்கு வலிக்குமோ என்று பிடித்தபடி கயிலை வாசன்,
ஆனந்தமாய் அவர் மடியில் அமர்ந்தபடி பாற்கடல் வாசன்.

நாகத்தை கிரிடமாய் கொண்ட இமய வாசன் 
மயில் பீலி மகுடம் கொண்ட பிருந்தாவன ராஜன் 
உடுக்கை இசை முழங்கும் அகிலம் அசையும்.
குழல் ஊதி இசைக்க அகிலம் மயங்கும் 

ருத்திராட்சம் அணிந்த மகாதேவன் 
முத்து மணி மாலை அணிந்த முகுந்தன் 
திரிசூலம் தாங்கி நிற்கும் திரிபுராந்தகன் 
சங்கு சக்கரம் ஏந்தி நிற்கும் பாண்டுரங்கன் 

செம்பவள மேனி கொண்ட சொக்கநாதன் 
கரிய திருமேனி கொண்ட கண்ணன் 
புலி ஆடை அணிந்து வரும் பண்டாரன் 
மஞ்சள் ஆடை அணிந்து நிற்கும் மாதவன் 

பன்னிரு திருமுறை புகழ் பாடிடும் சதாசிவனை 
நாலாயிர திவ்ய ப்ரபந்தம் இசைபாடும் பெருமாளை 
சாம்பல் அணிந்த திருமேனி மகேஸ்வரனது  
சந்தனம்  மணக்கும் திருமேனி கோவிந்தனது 

சௌந்தர்யம் குடி கொண்ட அருள் முகம் 
இரண்டினையும் காணக் கண் கோடி வேண்டும் 
தமிழின் மொழி போதவில்லை இதனை வர்ணிக்க.
கண்ணீர் பெருகுகிறது இதை நோக்கையிலே


கந்தையானாலும் கசக்கி கட்டு.

கந்தையானாலும் கசக்கி கட்டு.

சீவனானது சிவம் நினைக்கும் சட்டையை உடுத்தும்
சொக்கனுக்கே தெரியும் உயிரின் சொக்காய் எதுவென்று.
மகாதேவர் கண்டத்து ஆரமாம் அரவத்தை போலே உயிரும் 
சட்டை உரித்து கழற்றி எரிந்து பிரயாணம் தொடர்கிறது
அடுத்து ஆன்மா உடுக்கும் உடை எதுவோ ஆடவல்லானே அறிவான்.
மலையான் மருகன் கொடுக்கும் கொடையை மறுக்கவும் இயலுமோ

ஒரு பிறப்பில் பட்டு சொக்காய் உயர்ந்த இடமாம் மன்னவனாய்,
மறு பிறப்பில் மினுக்கும் சொக்காய் உயர்குடி வியாபாரியாய்
அடுத்த பிறப்பில் செயற்கை இலை சொக்காய் ஊழியனாய்
அதற்கடுத்த பிறப்பில் பருத்தி இலை சொக்காய் சேவகனாய்
அதற்கடுத்த பிறப்பில் கந்தை சொக்காய் பரதேசியாய் என,
சொக்காய் பலவகை தந்து சொக்கன் நமை சோதிப்பான்.

பட்டு என்று பகட்டு இன்றி,மினுமினுப்பு கண்டு பிரமையின்றி
செயற்கை இலையில் உழன்று திரியாமல்,பருத்தி இலையானாலும்
பக்குவமாய் பயன்படுத்தி,கந்தையானாலும் கசக்கி கட்டி,
அகந்தை விட்டு,ஆணவம் அறுத்து, நான் என்பதை விடுத்து
உண்மை,அன்பு, மெய்ஞானம் ,மெயுனர்வு,இறையுணர்வு கொண்டு
இன்னுயிர் அதனை இயன்றவரை மேம்படுத்தி பயணம் தொடர்வோம்.

கோடை மழை காரணம்

கோடை மழை காரணம்
சித்திரை மாத கத்திரி வெயில் கண்டு
சூட்டு நோய்களை எதிர்கொள்ள தயாராய்
வறண்ட தேகத்துடன் காத்திருந்த நேரம் 
அமிர்தம் போல் ஒரு கோடை மழை
காற்றழுத்த தாழ்வு நிலை காரணம்
என வானிலை அறிக்கை சொல்ல,
மன்மத வருடம் வந்ததால் என
சோதிட அன்பர்கள் சொல்ல -இவை
எதுவும் இல்லை என்னால்தான் என்பேன் நான்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை என்ற கூற்றின்
அடிப்படையில் என் கர்வம் காரணமா அதுவும் இல்லை,
மல்லி ,மிளகாய் மசாலா அரைக்க வாங்கி வைத்தேன்
வற்றல் வடகம் போட்டு வைக்க ஆயதம் செய்தேன்
இதுவரை செய்யாத புது வித சோதனை கண்டு
என் வீட்டாரை காக்கவென்றே வந்தது கோடை மழை

குதிரை என்னம்மா ...... செய்யும்?

குதிரை என்னம்மா ...... செய்யும்?
ஆரம்ப பள்ளி படித்த இளந்துளிர் பருவம்.
தமிழ்,கணிதம் புத்தகம் மட்டுமே கண்டதுண்டு,
ஏ,பீ ,சீ,டி என்பது மட்டுமே ஆங்கிலம் என்போம்,
அறிவியல்,வரலாறு என்ற பாடங்களும் அறியோம்,
அதற்கென புத்தகங்கள் இருப்பதையும் அறியோம்.

ஒரு கோடு போட்ட நோட்டு இரண்டு உண்டு,
நாலு கோடு போட்ட ஆங்கில நோட்டு ஒன்று,
சிவப்பு கோட்டில் மார்ஜின் போட்ட கணக்கு நோட்டு.
இதுவே அதிகம் எங்கள் ஆரம்ப பள்ளிக்கு,
வீட்டுப் பாடம் எழுத நோட்டுகள் கிடையாது,

வண்ண வண்ண பிளாஸ்டிக் சட்டை போட்ட
சிலேட்டுகள் உண்டு வெவேறு அளவில்.
அதில் எழுதவென்றே உருண்டை மாவு குச்சி,
பட்டையாய் எழுத கட்டை குச்சி
வேகமாய் எழுதும் கட கட குச்சி.

ஆசிரியை கரும்பலகையில் எழுதும் போதே
மணனம் செய்து ,நகலும் எடுப்போம் நோட்டில்,
ஆனால் என் கையெழுத்து காந்திஜிக்கே சவால் விடும்,
அதனால் என் நோட்டின் துணையும்,
என் சொல்லின் துணையும் கொண்டு
அம்மா வேறு ஒரு நோட்டில்எழுதி வைப்பார்.

அண்ணன் ,அக்காள் சிலேட்டில் எழுதி வைக்கும்
வீட்டுபாடம் அளிக்கவென்றே தம்பி,தங்கை
தவழ்ந்து வரும்,அதில் பிழைத்து அழியாமல்
ஆசிரியை கையில் சேர்ப்பிக்கும் வரை
கண்ணும் கருத்துமாய் காக்க வேண்டும்.

ஒரு நாள் மாய்ந்து,மாய்ந்து நான் எழுதியதை
மறைத்து வைக்க மறந்து போக தவழ்ந்து
வந்த என் இளவல் அதை அளித்துவிட்டான்.
அன்று வந்த சோகம் இன்றும் என் நினைவில்.
குதிரை என்ன செய்யும் என்பது கேள்வி!

அழுகையும்,ஆற்றாமையும் ஒன்று சேர
குதிரை என்னம்மா ......செய்யும் என்று வினவ.
குதிரை வண்டி இழுக்கும்,புல்லு என்றால்
வாயை திறக்கும்,கொள்ளு என்றால் வாயை
மூடிக் கொள்ளும் என்று என் அம்மா பதில்சொல்ல.

இவ்வளவு பெரிய வாக்கியம் வேகமாய் சொன்னால் எப்படி,
அதுவும்,குதிரைக்கு சின்ன ரை வருமா,பெரிய றை யா?
வண்டிக்கு வரும் 'ண்' இரண்டு சுழியா,மூன்று சுழியா என
எத்தனை குழப்பங்கள் தமிழ் எளிது என்று யார் சொன்னார்?

எனவே ஒவ்வரு முறையும் மீண்டும் கேள்வி கேட்பேன்
அழுகையோடு..."குதிரை என்னம்மா ...... செய்யும்" என்று.
என் அம்மா பொறுமைசாலி சலியாமல் பதிலளிப்பார்.
வீட்டுப் பாடம் எழுதும் முன்னே வீடு இரண்டு பட்டது.
மூன்று வரி முடியும் முன்னே முப்பது முறை அதே கேள்வி!

பொறுத்து,பொறுத்து பார்த்த என் தாத்தாவுக்கே வெறுப்பு வர,
அடுத்த முறை நான் வினவும் போது வேகமாய் வந்தார் அவர்,
நான்.......குதிரை என்னம்மா ...... செய்யும்.....என வினவ
ம்ம்ம்.....குதிரை லத்தி போடும் என்றார்..............
கொள்ளுக்கு குதிரை வாய் மூடுமோ தெரியாது
என் தாத்தாவின் சொல்லுக்கு கொல்லென சிரித்தது வீடு.
அன்று முதல் என்னை வம்பிழுக்கும் அடுத்த
அஸ்திரமானது......குதிரை என்னமா செய்யும்!

மனம் எனும் மந்திர கருவி.

மனம் எனும் மந்திர கருவி.
மந்தி போல் தத்தி தாவி தொங்கி திரியும்
நவரசங்களையும் நாள் தவறாது ஏந்தி திரியும்.
அடுத்தவர் என்ன நினைப்பார் என்றே ஏங்கி திரியும்.
உள் ஒன்று வைத்து புறமொன்றில் வேறே பேசித் திரியும்.
ஆசையுடன் சில நேரம் அகம் மகிழ்ந்து திரியும்
ஆணவத்துடன் பலநேரம் ஆரவாரமாய் பேசித் திரியும்.
துக்கமாய் சில நேரம் துவண்டு திரியும்.
திக்கற்ற பறவை போல் பறந்து திரியும்.
கருணையுடன் சில காலம் கலங்கி திரியும்
கடினமாய் பல காலம் கடத்தி திரியும்.
குரோதம் கொண்டு கொலைவெறியோடும் திரியும்
குற்ற உணர்வோடு தன் செய்கைக்காய் வருந்தி திரியும்.
பந்தயமாய் வையகத்தோடு ஓடித் திரியும்
பயத்தோடு வாழ்க்கையை நடத்தி திரியும்
காதலோடு கை கோர்த்து கரைந்து திரியும்
சிருங்காரத்தில் சில நேரம் சிக்கி திரியும்
சிரித்து மகிழ்ந்து சிறகடித்து பறந்து திரியும்
சிந்தனை வசப்பட்டு சீவனுக்குள் சிக்கித் திரியும்
பக்தியில் பரவசமாய் அமிழ்ந்து திரியும்
பரலோகம் காண ஆசை கொண்டும் திரியும்
வடுவுடன் வலிகளை சுமந்து அழுது திரியும்
பிறர் அறியாமல் அதை மறைத்தும் திரியும்
வீரத்துடன் வீராவேசம் காட்டித் திரியும்
வேண்டாமே வம்பு என்று விலகியும் திரியும்.
மனம் எனும் இந்த மந்திர கருவி
சித்தத்தின் வசப்படாத சின்ன குழந்தை
புத்திக்கு அகப்படாத பருவக் குழந்தை.
வயோதிகம் வந்து பக்குவமும் வந்துவிட்டால்
பதியோடு ஒன்றிவிடும் சமத்து குழந்தை

நாளும் பொழுதும்

நாளும் பொழுதும்
நாள் என்பது துளி,துளியாய் இணைந்து,
நிமிடமாய் வளர்ந்து,மணியாய் படர்ந்து,
முற்பகல்,பிற்பகல்,அந்தி,சந்தி,
முன்னிரவு,பின்னிரவு,சாமம்,என
வித விதமாய் பெயர் கொண்ட
இந்த பூமித்தாயின் ஒரு சுழற்சி.
இவை அனைத்தும் மனிதனுக்கு பொது,
ஆனால் ஒருவனுக்கு இனிமையானதை
மற்றவனுக்கு கொடுமையானதை கொடுத்து
ஒருபுறம் புத்தம் புது பிறப்பை பிரசவித்து,
மறுபுறம் மண்ணில் நின்றவனை மறைத்து,
ஒருவனுக்கு காமனவன் கணைகளை தொடுத்து,
மற்றவனுக்கு விரக்திஎனும் வேதனையை கொடுத்து,
சிலருக்கு கோடிகளில் புழங்கும் செல்வமதை தந்து,
பலருக்கு தெருக்கோடியில் புரளுகிற நிலை கொடுத்து,
மேலும் கீழும் ஆட்டி படைக்கும் இந்த நாளும்-பொழுதும்,
அனைவருக்கும் ஒன்றே,அதை அவரவர் வினைக்கு
ஏற்றவாறு எப்பொழுது,யார் யார்க்கு எப்படி என இயற்றிய,
இறைவன் அவன்,திறத்தை எண்ணவும் எம்மால் இயலுமோ

Monday, 25 May 2015

அம்மா தாயீ

அம்மா தாயி!

வண்ணம் கொண்டு வளைய வரும் வாழ்வில்

நிறமற்ற அல்லது மங்கிய நிறம் கொண்ட

சில பாத்திரங்கள் மனதில் பதியும்,

அதில் ஒன்றே அம்மா தாயி!


இது தினமும் என் வீடு தேடிவந்த

வினோதமான உறவு.

அழுக்கு புடவை, கலைந்த முடி,

சோகமுகம்,சோம்பல் தேகம்!

 

ஆறடி தூரம் வரும் போதே

குடலை புரட்டும் வாடை

கையில் தூக்கு போணி

இது தான் அம்மதாயீ!

 

தாயாக மாறும் முன்னே 

என்னைத் தாயாக அழைத்தது,

பதின் பருவ சமையலையும் பாராட்டியது.

மிஞ்சிய சோறும் குழம்பும் அமிர்தம் அதற்கு!

 

தினமும் வீடு தேடி வரும் விருந்தினர் ஆனது

சில நாள் பழக்கத்தில் வாடிக்கையானது,

மிச்சம் வரும் வெஞ்சனம் சுடவைத்துப் பக்குவமாய்

பல நாள் அதன் வரவை காத்து நான் நின்றதுண்டு!

 

அம்மா தாயி என்று அதன் குரல் கேட்டு

உன் மகள் வந்தது என்று-என் கணவர் 

எனை கேலி செய்யும் உறவானது.

காலங்கள் கடந்து மனக்கண்ணில் நிற்கும்

ஏழு வருட உறவு அம்மா தாயி!


பனங் கொட்டை சாமியார்.

பனங் கொட்டை சாமியார்.
என்னை ஆட்டி படைத்த அதிசய சாமியார்.
பழுப்பு வண்ணம் கொண்ட பரட்டை சாமியார்.
முன் அறையில் இருந்து முறைத்த சாமியார்
முறுக்கு மீசை கொண்ட முரட்டு சாமியார்.
சண்டித்தனம் செய்த எனை சரிகட்ட
என் அன்னைக்குஉதவிய அருமை சாமியார்,
விட்டு கொடுக்க மறுக்கும் என்னை
உடன் பிறப்புகளுக்காய் விரட்டிய சாமியார்,
இவர் பெயர் சொன்னால் போதும்
பின்னங்கால் பிடரியில் பட
காத தூரம் ஓடுவேன் யான்.
வீட்டுக்குள் புகாமலேயே வேறு
புகலிடம் தேடி அலைவேன் யான்.
அப்படி சக்தி படைத்த சாமியார் யார்?
சப்பிபோட்ட பனம்பழத்தில் முளைத்தவர் அவர்.
தலை விரி கோலமாய் இருந்தவர் அவர்.
கைவினைஞன் கை பட்டு அவதரித்தவர் அவர்.
மிளகு போன்ற கண்கள் கொண்டவர்
வில் போன்ற புருவம் கொண்டவர்
கோபம் கொண்ட மீசை கொண்டவர்
மிளகாய் பல அதரம் கொண்டவர்.
சிங்கம் போல் பிடரி முடி முகம் கொண்டு,
சிறிதே முறைத்த வண்ணம் நிலை படியின் மேலே
ஆணியில் தொங்கும் திருஷ்டி பொம்மை 
எங்கள் பனங் கொட்டை சாமியார்.
வளர்ந்து வரும் செயற்கை உலகில் 
அவதரித்த ஆயிரம் கலவைகளால்
இவ்விடம் விட்டு மறைந்த மாய சாமியார்,
செயற்கை மறைத்த இயற்க்கை சாமியார்.
பயம் விட்டு பாசமுடன் அழைத்தாலும்
வாராத இடம் நோக்கி பரந்த சாமியார்.
பார்வைக்காக கூட ஒரு அவதாரம் தராத
எங்கள் பனங் கொட்டை சாமியார்.

சுமையை அகற்றுவோம்.

சுமையை அகற்றுவோம்.

சீவி முடித்து ரிப்பன் சூட்டி
சீருடை அழகாய் தரித்து
அடையாள அட்டை அணிந்து 
பள்ளி செல்லும் சின்ன சிறுமி

தன் திறன் முழுதும் திரட்டி
பளு தூக்கும் நங்கைபோலே
தன் புத்தக மூட்டையைத் தூக்கி

சற்றே உயர்ந்த இடத்தினில் நிறுத்தி,
பின்னே திரும்பி தன் கைகளை
லாவகமாய் அதன் பட்டையில் செலுத்தி,
தம் கட்டிய மூச்சுடன் முதுகினில் தூக்கி,

இடக்கரம் தன்னில் ஆகார பையை இழுத்து,
மற்றொரு கையில் செய்முறை படங்களை நிறுத்தி.
உண்டும்,உண்ணாமலும் ஓடும் நிலை கண்டு
எதற்குத்தான் இந்த சிட்டுக்குருவிகளுக்கு

இத்தனை சுமை என்று அங்கலாய்க்க,
அருகே வந்த அன்பு தோழி காட்டினால் காட்சி ஒன்று.

அழுக்கு படிந்த முகமும்,நைந்த ஆடையும்
பரட்டை தலையும் கண்ணில் சோகமும்
ஒட்டிய வயிற்றுடன் ஏழை சிறுமி.
தலையில் சுமையாய் கற்குவியல்,
பள்ளிப் படிப்பையே சுமையாய் தரக்கூடாது
என்று ஆயிரம் குரல்கள் எழுப்பிக்கொண்டு
கல்வியாளர் ஆராய்ந்து கொண்டிருக்க,

சுமையைச் சுமக்கும் வாழ்வே தமதென வாழும்,
இந்த பிஞ்சுகளின் வாழ்வைக் காக்க
மதிய உணவு தந்து பள்ளிக்கு வரவழைத்த
காமராஜர் முதலாய்  அனைவரும் முயல
நாமும் கைதருவோம் சுமையை அகற்ற!

வாழ்க்கை சுமையைச் சுமக்கும் வயதல்ல இவர்க்கு,
குறைந்தபட்ச கல்வியைத் தருவோம் இவர்க்கு,
விழுதாய் விழுந்த இந்த சிறு மலரும் கூட
வியந்து நோக்கும் ஆலமரமாய் ஆகும்.
இன்று இவர் தம் சுமை அகற்றுவோம்
நாளை அவர் இந்தியச் சுமை அகற்றுவர்!



பழகிகொள்ள கொள்ளை ஆசை.

பழகிகொள்ள கொள்ளை ஆசை.
சின்ன,சின்ன ஆசை ஒவ்வருவருக்கும் உண்டு.
சிறகடித்து பறக்கும் ஆசையும் உண்டு.
சக்திக்கு சிம்மம்,
சிவத்திற்கு காளை
முருகனுக்கு மயில்.
முன்னவருக்கு மூஞ்சுறு,
மாயவனாம் மாமனுக்கு கருடன்
கருப்பனுக்கு குதிரை
பைரவருக்கு நாய்
என தெய்வங்களுக்கு வாகனம் தந்தோம்.
அவனும் தந்தான் மானிடர்க்கு வாகனம்.
ஒன்று,இரண்டு,மூன்று ,நான்கு,ஆறு என
சக்கரத்தின் எண்ணிக்கை மாற்றி
இயல்புக்கு ஏற்ப எடுத்துகொள் மானிடா என்று
ஆனால் அதை பழகிக்கொள்ள ஆசை மட்டுமே உண்டு எனக்கு!

அவரவர் வாகனமே அவர் ப்ரிய பிராணியாய் மாறின.
அனைத்து ஜீவராசியிடமும் அன்பை கொண்டாட
எல்லாம் ஒன்றே என்று மானிடர் உணர்ந்திட
தெய்வங்கள் அணைத்து உயிரிடமும் அன்பை பொழிந்தன.
மானிடர்,மனிதத்துவம் மறந்தனர் ஆயினும்,
செல்ல பிராணி வளர்க்க தவறவில்லை.
எதனிடமாவது அன்பை செலுத்த தெரிந்ததே
இவ்விதமாவது வளரட்டும் அன்பு என்று நானும்
பைரவர் வாகனத்தின் அருகில் செல்ல எண்ணமிட்டேன்
ஆனால் அதை பழகிக்கொள்ள ஆசை மட்டுமே உண்டு எனக்கு!

இவ்விதமாய் பழகிக்கொள்ள ஆசைகள் கொண்டது இரண்டு
ஆனால் தெனாலியை விடவும் அதிக பயம் கொண்டது மனது.
பள்ளிச்சிறுமி ஒருத்தி வளர்ப்பு நாயுடன் ஒருநாள்
மிதிவண்டி மிதித்து செல்வதை கண்டபோது ஏக்கம் பிறந்தது,
பயமும் பற்றியது.பற்றற்ற வாழ்வினை பற்றி பல,பல
எண்ணங்கள் உதிர்க்கும் மனமே எங்கே போனது உன்
துணிச்சலும் தைரியமும்,எதை தொலைக்கும் பயம் உனக்கு
என எச்சி காரி உமிழ்ந்து என் மனதை ஏசி நின்றேன் நான்.

அந்த நாளும் வந்திடாதோ?
கீழ் வீட்டு டோனியுடன் விளையாடி,
ஸ்கூட்டி ஒட்டி மகிந்தாடும் அந்த நாளும் வந்திடாதோ?
பழகிகொள்ள கொள்ளை ஆசைஎனக்கு!

நான் மௌனமாய் இருக்கிறேன்.

நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு,
அப்போதுதான் அதிகமாய் பேசுகிறேன் என்னுடன்.
எதற்காய் பிறந்தோம் இவுலகில் என கேட்கிறேன்.
என்ன செய்து கொண்டிருக்கிறேன் என கேட்கிறேன்
எதை நோக்கி செல்கிறேன் வினா எழுப்புகிறேன்
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.

அடுத்து என்ன செய்ய என கேட்கிறேன்
எதையோ பெற முயல்வதை எண்ணுகிறேன்
எதை பெற எண்ணுகிறேன் என கேட்கிறேன்
பணமா,புகழா,பாசமா,பசிக்கு உணவா....
எல்லாம் இறைவன் தந்தானே என சொல்கிறேன்
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
சில நேரம் பிரிந்து சென்ற உறவுகளை நினைகிறேன்,
அவர்தம்மை நினைவினில் நிறுத்தி பொழுதை கழிக்கிறேன்
தந்தை தாயென கழிந்த பொழுது திரும்புமோ என ஏங்குகிறேன்
அதுவும் படைத்தவன் விதித்த விதிதான் என தேறுகிறேன்
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
என்னை சுற்றி நடக்கும் இயல்புக்கு வருகிறேன்
இவரவர் செய்த செயல் எல்லாம் சரியோ யோசிக்கிறேன்,
சரி,தவறு,கோபம்,இயலாமை,இன்ன பெயர் பல கொண்டு
எல்லா செயல்களுக்கும் ஏதோ ஒரு பெயர் கொடுக்கிறேன்.
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
என் குடும்பம்,என் பிள்ளைகள் எதிர்காலம் என யோசிக்க,
நடந்ததெல்லாம் உன் செயலோ,உன் எண்ணமோ என கேள்வி பிறக்க,
அவனின்றி அணுவும் அசையாது எனும்போது சிந்தை எதற்கு
சித்தத்தை சிவன் பால் வைத்து சிவனே!என்றிருக்க மனம் சொல்ல
நான் மௌனமாய் இருக்கின்றேன்.

பதியும் பசுவும்

பதியெனும் சொல்லுகுரியவன் இறைவன் 
பசுவெனும் சொல்லுக்குரியவை உயிர்கள்
முன்னவனுக்கும்,பின்னவைக்கும் ஒற்றுமை பல.
ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள்.
என்றும் நிலைத்தவர்கள்.
ஆம் ஆனால் மும்மலம் அற்றவன் முன்னவன்.
முமலமும் உற்றவை பின்னவை.
இருபினும் இருந்தது சில ஒற்றுமை.
ஆம் அருவமாய் எங்கும் நிறைந்தவன் ஈசன்.
ஸ்தூல உடல் துறக்கும் காலம் சூட்சமமாய் இருப்பன உயிர்கள்.
அரு உருவாய் லிங்க மேனியாய் அமைந்தவன் அப்பன்.
ஈர் ஐந்து திங்கள் மட்டும் கரு உருவில் நிற்பவை உயிர்கள்.
எல்லாம் வல்ல சித்தனாய்,பொன்னம்பலம் ஆடும் ஐயனாய்
நடராஜ மூர்த்தியாய் நடனம் காட்டியவன் உருவமாய்.
ஐம்புலன் கொண்டதாய் பஞ்சபூத சேர்க்கையில் ஆண்,பெண்
என்று பல வித வண்ணம் கொண்டு உருவம் கொண்டன உயிர்கள்.
பதி பசுவை உய்விக்க வல்லது ,முக்தி தர உதவுவது.
பசு பதியை பற்றியது,முக்தி பெற முனைகிறது.
பதி,உயிருடன் உயிராய் இருந்து இயக்குவது.
பசு,தம்முடன் இருக்கும் பதியை அறியாமல் தவிக்கிறது.
கண்ணுக்கு பொருட்களை காட்டவல்லது சூரியன்
அது போலே பதியாகியது,பசுவுக்கு அனைத்தையும் காட்டுவது.
இயற்கையில் ஞானம் நிறைந்தது பதி,
அது அறிவித்தால் அறிவது பசு.
இதுபோல் இன்னும் உண்டு ஆயிரமாயிரம் பந்தம்
பதிக்கும்,பசுவுக்கும்.அதை உணர்ந்தாலே உண்டு முக்தி.

அண்டமும் பிண்டமும்.


ஆயிரம் சத்தியம் சொல்லும் சைவத்துள்ளிருந்து,
ஒரு துளி சிந்தபடுகிறது இங்கே சிந்திக்க!
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது!
என்பது சித்தாந்த வாக்கு.
அண்டத்திற்கு தந்தான் ஆண்டவன் ஐம்பூதத்தின்
சேர்க்கையால் ஓர் உருவை
அதை பிண்டத்திலும் வைத்தான் இறைவன்
ஆன்மா உட்புக ஓர் உடலாய்.
நிலம் எனும் திடப் பொருள் தத்துவம்
இதில் இறைவன் ஐந்தாய் பரந்திட்டான்.
அண்டத்தில் மண்,மலை,கல் எனவும்,
பிண்டத்தில் சதை,எலும்பு,நரம்பு,தோல் எனவும்,
ஒருங்கே நேர்த்தியாய் இருந்திட்டான்.
நீர் எனும் திரவப்பொருள் தத்துவம்
இதில் நாயகன் நான்காய் நிகழ்ந்திட்டான்.
அண்டப்பொருளில் நீர் நிலையென நிறுத்திட்டான்.
பிண்டப்பொருளில் கபம் எனும் ஐவகை நீராய் நிறைந்திட்டான்.
(ஐவகை நீர்-ரத்தம்,உமிழ்நீர்,சிறுநீர்,சளி,இனப்பெருக்க நீர்)
தீ எனும் சூடு தரும் தத்துவம்
இதில் தீஞ்சுடர் சோதி மூன்றாய் திகழ்ந்திட்டான்.
அண்டத்தில் அக்னியை ,ஒளியாய் அமைந்திட்டான்.
பிண்டத்தில் பித்தம் எனும் ஐவகை சூடாய் இருந்திட்டான்.
(இருதயம்,செரிமம்,கண்களின் ஒளி முதலான ஐவகை உண்டு.)
வளி எனும் வாயுப்பொருளில் இரண்டாய் மகிழ்ந்திட்டான்.
அண்டப்பொருளில் அடுக்கடுக்காய் காற்றாய் பரவி நின்றான்,
பிண்டப்பொருளில் வாதம் எனும் பத்து வகையாய் பரவிட்டான்.
(நாம் உணரும் மூச்சு முதல் பத்துவகை வாதம் உண்டு)
வெளி எனும் வெற்றிடத்தில் ஒன்றாய் விளைந்திட்டான்.
அண்டத்தில் பால்வெளி வீதி என பக்குவமாய் அமைத்திட்டான்.
பிண்டத்தில் கபமும்,வாதமும் பயணப்பட வெற்றிடம் ஒன்றை
அமைதிட்டான்,
அண்டத்தில் உள்ள அனைத்தையும் பிண்டத்தில் வைத்த இறைவன்.
அண்டத்தையும்,பிண்டத்தையும் ஆன்மா அனுபவிக்க படைத்திட்டான்.
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!
-போற்றித் திருஅகவல் ,திருவாசகம்.

அவளும் அன்னைதான்

அவளும் அன்னைதான்
நொடியில் மதி இழந்தாள் கைகேயி.
நொந்து வெந்து அனுதினமும் மரிகின்றாள்
சனத்தில் செவி கொடுத்தால் மந்திரைக்கு
சாயும் நாள் வரையில் விசனப்பட்டாள்.
ஆசை காதலியாய்,அன்பான மணைவியாய்
அந்தபுரத்து நாயகியாய், அந்தஸ்து மிக்க அரசியாய்
தசரதன் மனம் கவர்ந்த தேவதையாய் இருந்திருந்தாள்
சக்காளத்திகளையே சகியாக பெற்றவளாய்
நன் மகன்கள் நால்வரை பெற்றவளாய்
பேதம் பிரித்தறியா பேதையாய் இருந்திருந்தாள்
பண்டு பகீரதன் ஆண்ட ராஜ்ஜியம்
அன்று அரிச்சந்திரன் அமர்ந்த சிம்மாசனம்
இன்று தசரதன் கை செங்கோல் -யாவும்
தன் தலைமகன் ராமனை சென்றடையும் என்று
பட்டாபிஷேக கோலத்தில் அவன் அழகை காண
ஆனந்தமாய் அந்நாளை எதிர்நோக்கி இருந்திருந்தாள்
கூன் முதுகை தள்ளி,வந்து சேர்ந்தாள் மந்திரை
கேகேயன் நாடு பெற்றமகளின் சிந்தையில்
ராமனுக்கு புது அடையாளம் புகுத்தி விட்டால்
கோசலை மைந்தன்,சீதையின் நாயகன் என்று!
சிந்தை குழம்பி நின்ற மங்கையின் நினைவு அதை நிறைத்தாள்
ராமன் அரசாண்டால் பரதன் அவன் சேவகன் ஆவான் என்றும்
அவன் தாய் நீயும் ராஜமாதா கோசலையின் தாசியாவாய் என்றும்
இதற்கு மாற்றுவழியும் மந்திரை துர் உபதேசமாய் செய்துவித்தாள்
தன் நிலை தாழக் கூடாது என்ற நினைவில் தரம் தாழ்ந்தாள் கைகேயி
இயல்பு நிலை விடுத்தாள் கோபம் கொண்ட பிடாரி கோலம் பூண்டாள்
தன் இனியவளிடம் மனதை பகிர வந்த மன்னன் திகைத்து நின்றான்.
மனைவியை தேற்ற முனைந்தவன் சிலையாய் சமைந்து நின்றான்
பரதன் நாடாள,ராமன் ஈரேழு வருடம் காடாள இருவரத்தை பெற்றாள்.
திராவகமான வார்த்தைகள் வரமாய் பெற்றுவிட்டாள் பாதகி-தன்
சுய உணர்வை இற்றுவிட்டு மரம் போல் வீழ்ந்திட்டான் மன்னவன்
ராமனை அழைத்து வரத்தின் விவரம் தெரிவித்தாள் கல் மன தாய்.
அவனும் தன் இல்லாளும்,இளையவனும் பின் தொடர புறப்பட்டான்
கானகம் நோக்கி ராமன் சென்றுவிட பரதன் அயோத்யா நகர் புகுந்தான்
தெருவெங்கும் வெறிச்சோடி சூனியம் நிறைந்திருக்க திகைத்திட்டான்.
சாகேத் நகரம் ஆழ்ந்த சயனம் கொண்டதுபோல் வெறிசோடி இருக்க
சத்ருக்னனுடன் நகர் பிரவேசம் செய்தவன் விரைந்தான் விவரம் அறிய.
மிடுக்கான நிமிர்வு கொண்டு தாயவள் நடந்தவை நடந்தபடி சொல்ல.
பத்துமாதம் சுமந்தவளை பாவி என்று ஏசி,பரிதவித்து நின்றுவிட்டான்
மாபாதகம் செய்தாய் பாதகி , ரகுவம்சம் கொண்ட குலநாசினி -தீராபழி
நான் சுமக்கவும் செய்தாய், உன் மடி எனை ஏன் சுமந்ததுவோ என்றான்
உன் மகன் பட்டம் கொள்ள ஆசை கொண்டனையே இதோ கேள் இனி
ஒருபோதும் உன் முகம் காண மாட்டேன்,உன் மகன் இன்றே மடிந்தான்
என்று அக்னி கங்குகளாய் அள்ளி வீசி அவ்விடம் விட்டு.மறைந்தான்.
வரமாய் பெற்ற ராஜ்ஜியம் மகன் ஏற்கவில்லை நெற்றிகுங்குமமும்
அவளுக்கு நிலைக்க வில்லை,தகப்பனுக்கு ஈமகிரியை செய்யும்
பாக்கியமும் பரதன் பெறவில்லை மிஞ்சியது அவப்பெயர் மட்டுமே.
பத்து தலை அரக்கன் அவன் விதி கைகேயி சிந்தையை சகியாக்கியது.
இலங்காபுரி வீழ்ச்சி அது கூனியின் சொல்லை செவிமடுக்க வைத்தது.
வாலியின் வரம் அது வழிய வந்து இரு வரமாய் அவதாரம் கொண்டது.
இவையெல்லாம் காண்பார் எவரும் இவுலகில் உண்டோ -சில நாட்கள்
மாயை அது கைகேயி சித்தத்தை குத்தகை கொண்டது ,மொத்தமாய்
அவள் நற்பெயரை கொள்ளை கொண்டது,தீரா பழி கொள்ள செய்தது.
மாயைவிலகிய பின்னே,,மணாளனும் வெறுத்து விண்ணுலகு சென்றிட
மகனும் அவளை தவிர்த்து மரஉரி தரித்து தமையன் தரிசனம் காண
கானகம் நோக்கி அயோத்தி நகர்வாழ் மாந்தர் சூழ புறப்பட்டான்.
தான் செய்த பாவத்திற்கு பிராயசித்தம் தேட அவளும் உடன் சென்றாள்
ராமனை கண்டவள் கதறி அழுதாள்,மன்னிப்பு யாசகம் செய்திட்டாள்
சுய பச்சாதாபமேனும் தீ சுட்டெரிக்க ,மெழுகாய் உருகி கரைந்திட்டாள்
கைகேயி நிலை கண்ட ராமன் தாயே,உன் தவறு ஒன்றும் அன்று.விதி
செய்த வேலைக்கு நீ ஒரு கருவி மட்டும் தானே,கலங்காதே என்றான்.
தலை மகன் மன்னித்து தான் அவதார புருஷன் என காட்டிவிட்டான்
ராமனின் பாதுகை அரசாட்சி செய்ய,நகருக்கு புறமாய் பரதன் குடில்
அமைத்து ராஜ்யத்தை காவல் காக்க,அரண்மனை அந்தபுரத்தில்
தன்னையே நொந்த அந்த பேதை அவளுக்குள்ளே குமைந்திருந்தால்.
செப்புவார் மதி கேட்டு செப்ப இயலா சொல் உதிர்த்து அயோத்திக்கு
வாங்கி தந்தேன் ஈரேழு வருட தண்டனையை -உண்மையில்வனவாசம்
உனக்கல்ல உன்னையே நினைத்து உருகி நான் கடைந்தேற ராமா
பிரபஞ்சமே பெண்ணினத்தின் கெடுமதி உடையவள் என என்னை எண்ணிக்கொள் ஆயினும் என் மகனுக்கு நல்லதை எண்ணிய தாய்நான்
கெடுமதி பெண் இருப்பாள்.கெடுமதி அன்னை இருக்கமாட்டாள்.
நானும் தாய் தான் என் மகன் எனை தூற்றினாலும் ஏற்றுகொள்வேன்
என தன் தவறை தான் உணர்ந்து தவம் செய்யும் யோகினி போல் பழி
எல்லாம் ஏற்று இன்றும் நம் மனதில் வலம் வருகிறாள் கைகேயி.

மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம்.!

மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம்.!
இலையுதிர் காலம் கடந்து இளந்தளிர் துளிர்த்து
பசும் பச்சை பட்டாடை உடுத்தி வசந்தகாலம் போல்,
கடந்த ஆண்டை பூர்ண ஜெயமாய் முடித்து 
குதூகலம் பொங்கும் மங்களம் தரும் வரமாய்
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
வெறுமை நிறைந்த வாழ்வை விரட்டி அதில்
வடுவாய் நிற்கும் தழும்பை மாற்றி
மயிலிறகாய் மனதை வருடி சுகம் தர
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம்!
கோடை வெயிலாய் தகித்த நிலையில்
வெக்கை தாழாமல் தவித்த நிலையில்
தூரல் மழையாய் தேகம் குளிர்விக்க
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
உருவிப் போட்ட வண்ணங்களை எல்லாம்
ஒன்று ஒன்றாய் மேலும் மெருகேற்றி
உயிரோட்டமுள்ள அழகோவியமாய்
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
மொட்டை வனமாய் மங்கியிருந்த தோட்டத்தை
மொட்டு விட்டு பூக்க செய்து மனம் பரப்பி,
துந்துபி வந்து மெட்டுக்கள் இசைக்கும் படி
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
பூக்கள் வண்டுகள் மூலம் காதல் தூது விட,
பறவைகள் தாமே தம் இணைகளை தேட,
விலங்கினமும் தன் பேடையுடன் கூட
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
விரக்தி கவி எழுதும் கவிஞரும் மாற,
புரட்சி கவிதாயினிகளும் பொங்கி மலர
எல்லாவற்றையும் லைக் செய்யும் மனிதருக்காய்
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
என் இனம் என பேசும் எழுச்சி மனிதருக்காக,
என் மதம் என மதம் பிடித்து திரியும் மானிடர்காக
எல்லாம் ஓரினம் அன்பே அதன் வடிவம் என உரைக்க
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
கணினி முன்னே காலம் கடத்தும் நங்கைகளுக்காக
இலக்கு முடிக்க பறந்து கொண்டிருக்கும் இளைஞனுக்காக
இனிதே இவர்களை ஏமாற்றி கடக்கும் காலத்தை நினைவூட்ட,
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
குழல் ஒலி ,யாழ் ஒலி ,பறை ஒலி பெரிது அன்று
தம் மக்கள் மழலை மொழி கேட்கவே தவிக்கின்றோம்
என்ற தம்பதியர் வேண்டும் பிள்ளை வரம் தந்திடவே
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
சமாதி நிலை சென்றிருந்த சங்கரரை அவனியின்
அவசியம் கருதி வாளி தொடுத்து எழுபிவிட்டு தானே
சாம்பல் ஆகி உயிர்தெழுந்து சிருங்கார ரசனை கொண்டு
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம்!
வன்முறை கட்டு அவிழ்த்து ஆடும் நிலை மாறி,
அன்பும்,பாசமும்,நேசமும்,பெருகி காதல் மனம் பரப்பி,
தன் மனையாள் ரதி தேவி உடன் பிரியாத அவன் போலே
இந்த அவனியும் உற்ற துணையுடன் சுகம் பெற வாழ்த்தவே
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !

ஜோடிப் பொருத்தம்.

ஜோடிப் பொருத்தம்.
ஈரடுக்கு மாளிகையும், வளவளக்கும் சலவைகல்லும்
வாழ்ந்த முறை மாத்தல இந்த அப்பத்தாவ.அப்பிடியே தான் இருக்கு,
மகளுக்கு சம்மந்தம் அமைஞ்சு வர அடுத்த கட்ட பேச்சுக்கு 
கெளம்பி நிக்கும் மருமக, ஏகப்பட்ட ஏவல்கள சொல்லி போக,
எல்லாத்தையும் செவி மடுத்து ,கேளாது போலே முறைத்து
இங்கன நின்னு பொலம்பாம காரோடு காத்து நிக்கான் என்
மகன் பாவம், அங்கன பொய் உன் சோலிய பாரு என
எகத்தாளமா அப்பத்தா சரடு விட,நோகாம காத்து நிக்கும்
உங்க மகன் பாவமாக்கும் ,விடிஞ்ச பொழுதா நிக்காம
பம்பரமா சுத்தி வேலை பார்க்கும் என்னை காங்கலையோ
என சளைக்காம மருமகளும் கச்சை கட்ட,சரிதான் போ ஆத்தா
உன் பெருமை நீயே பேசிக்குவ ஆகுற காரியத்த பாரு அங்கன
என்ன,பேசணும் வைக்கணுமுன்னு முன்னமே யோசிச்சுக்க
என அதட்டி மனசுக்குள்ளே அவர்கள் போற காரியம் ஜெயமாக
வாழ்த்தும் சொன்னது வள்ளி கண்ணு என்று பெயர் கொண்ட அப்பத்தா.
அங்கே விசனமான முகத்துடனே வந்து சேர்ந்த பேத்தியாளை
ஒரு நொடியில் இனம் கண்டு வார்த்தை ஜாலத்தாலே தன் அருகே
வரவழைத்து தீர்கமான தன் கண் கொண்டு அவள் மனதை படித்தது.
முதுகலை பட்டம் பெற்று ஓரளவு உலக நடப்பை கற்றிருந்த நங்கை
அப்பத்தா பெயரை கொண்ட அம்சமான இந்த சின்ன வள்ளியம்மை.
சுத்தி வளைத்து தான் மாநிறமான முகம் வெண்மை அடைய
ஏதேனும் உபாயம் உண்டோ இந்த அப்பத்தாவின் அகராதியில்
என வேண்டினால் முருகனை போல் முக வடிவு கொண்ட முத்தையன்
என்ற சிவந்த நிற மாப்பிளைக்கு பேசி வைத்த பெண்ணரசி.
மனக் கண்ணில் தன் ஜோடி பொருத்தம் குறித்த சந்தேகத்துடன்.
நாட்டில் உள்ள வியாகியானம் எல்லாம் பேசும் சகலகலா கிழவி
வாழ்கையின் நெளிவு ,சுழிவு கண்டு நேர்த்தியாக குடும்பம்
நடத்திய விவகார குடும்பி அனுபவசாலி வள்ளிகண்ணு அப்பத்தா.
நிதமும் புராண கதை சொல்லி போகும் வழிக்கு புண்ணியமும்,
தன் சந்ததிக்கு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைக்கும் மகராசி.
மீனாட்சி கல்யாண விவரம் சொல்லி, அதில் இந்த உலகாளும்
அங்கயற்கண்ணி மாநிறந்தான் என திருக்கல்யாண படத்த காட்டியது
பக்கத்திலே நிக்காறே அவ மணவாளன் சொக்கநாதன் அவுக நிறம்
கற்பூரம் போல வெள்ளையடி, மாநிறமா இருந்தாலும் மீனாட்சி
தன் மனையாட்டி என கைலாயம் விட்டு வந்தார் கடவுள் என்றது.
ராமர் கல்யாண கதை சொல்லி, கார் மேக நிறமாய் ராசாராமர்
நிற்க அவர் பக்கத்திலே செவந்த தாமரையா நிக்கும் சீதைய
காட்டியது,இப்படிதான் உலகமது.கடவுளுக்கே அதான் வாச்சது.
குடும்பம் நடத்த குணந்தான் வேணும் நிறம் இல்ல என்றது.
அவங்க எல்லாம் சாமி...என இழுத்த பேத்திக்கு இன்னும் சொன்னது
சிவபெருமான் இந்த உலகத்த படைப்பாரு ,அழிப்பாரு எல்லாம்
செய்வாரு அதுக்கு சக்தியா துணை இருக்கும் மீனாட்சி அம்மா.
பெருமாளு உலகத்த காப்பாறு அதுக்கு செல்வமாய் இருந்து
உதவி செய்யும் லட்சுமி அம்மா,அதுபோல நம்ம எழுத்த எழுதுற
பிரம்மனுக்கு அறிவா இருக்கும் பேச்சியாத்தா,அதான் சரஸ்வதி.
இப்படியாய் அப்பத்தா, தன் தலைமுறையிலும்,அடுத்து வந்த
சந்ததியிலும் ஆயிரம் உதாரணம் சொல்லி குணம் பொருந்தி,
விட்டு கொடுத்து,தக்க துணையாய் இருந்து வாழ்க்கை நடத்தும்
தத்துவத்தை தன் பேத்திக்கு உபதேசித்தது .மனம் தெளிவு கொண்டு
கல்யாண கலை வந்த தன் பேத்தியின் முகம் கண்டு மன நிறைவோடு
மருமகள் சொன்ன ஏவல்களை செயலாகியது வள்ளி கண்ணு அப்பத்தா.