Wednesday, 6 May 2015

ஜானகியின் ஜணனன் -4

ஜானகியின் ஜணனன் -4
சிவதனுசை முறித்து சுயம்வரம் ஜெயித்து 
விஜயராமனாய் நின்றிருக்க அவரின் தோள்களில் 
வரமாலை சூட்டி சீதாராமனாய் மாற்றவென
அடிமேல் அடி வைத்து அளவற்ற ஆனந்தமுடன் 
அவள் நயனங்கள் புவி அன்னையை நோக்க 
அதரமத்தில் மென்னகை தாங்கி வதனமத்தில்
வெட்கம் சூழ கண்கள் மலர்ந்து கன்னம் சிவந்து 
அண்ணலை நோக்கி அன்னை ஜானகி வந்தால்
ஜனகர் ஆசை மகளை நோக்கி சம்மதம் சொல்ல -25

ஆரணங்கு அவள் மாலை சூடினாள் ராமருக்கு 
தம்பி லட்சுமணன் ரகுவம்சம் சார்பாய் மாலை தர 
அதை நெஞ்சில் குடிகொண்ட கோதைக்கு சூட்டினார் 
மகளை பெற்றவர் மகிழ்ந்து நிற்க முனிவர் ஆசிதந்து 
ஆனந்தமுற்றிருக்க இடியென முழக்கம் கேட்டது 
மின்னெலென ஒளிரும் கண்கள் சினத்தால் சிவக்க 
கர்ஜிக்கும் சிங்கம் போல் வந்து நின்றார் பரசுராமர்
அவரின் கோபம் கொண்ட கோலம் கண்டு ஜனகர் 
விதிர் விதிர்த்து விரைந்து வந்தார் விளக்கம் தர  -26

விஷ்ணுவின் அவதாரம் இரண்டும் நேரெதிர் நின்றது 
ஒருவர்  கோபக் கனலாய் கொதித்திருக்க மற்றவர்  
அமைதி கடலாய் கருணை ததும்ப நின்றிருந்தார் 
தம் ஆதிகுருவாம் சிவனாரின் வில்லை முறித்தது யார் 
என சினந்து வினவி நின்றார் ஜனதக்னி மைந்தன் 
சத்திரியர் குலம் வேர் அறுக்க சபதம் கொண்டவர் 
தம் தவநிலை கைவிடுத்து கருவறுக்க வந்தாரோ
என வேதனை கொண்டு விளக்கம் சொன்னார் ஜனகர் 
வரமாலை சூடி நின்ற மகளை வணக்கச் சொன்னார் -27

மலர் மாலை சூடி நின்ற மங்கைக்கு ஆசி சொல்லி 
வந்த காரியம் அதற்கென விடை கேட்டு நின்றார்.
சினந்து நின்ற தம் மற்றொரு அவதாரம் முன்னே 
சாந்தமுடன்  வந்து வணங்கி நின்றார் உத்தமராமன் 
தாம் சினமுற காரணம் ஆனவன் நானே என பதிலுர 
விஷ்வாமித்திரர் முன் வந்து ராமரின் அறிமுகம் தந்தார் 
கவனமுடன் ராமனை  கண்ட பரசு முக்காலம் உணர்ந்தும் 
எக்காலம் போலே உம் தனுசு கொண்டு நான் ஏற்று என 
கட்டளை இட,கலக்கமுடன்  நின்றார் ஜானகியின் ஜனன் -28

அவதாரங்கள் மோதும் அதிசய காட்சி முனிவர் அகம்
முற்றும் உணர்ந்ததால் அமைதியான சாட்சியானார்.
கோதண்டம் உயர்த்தி ராமபானம் தொடுக்க ஆயத்தமாய் 
தசரத ராமன் நின்றிருக்க நானேற்றிய நொடியே மகத்துவம் 
அறிந்த பரசுராமன், ராமபானம் என் ஆணவம் சினம் அழித்து
திரும்பட்டும் என கட்டளை இட தொடுத்தார் ராமர் அம்பினை 
பரசுராமர் தம் சினம் குறைந்து சிந்தை குளிர்ந்து ரகுராமனை 
ஆலிங்கனம் செய்ய பரசுவின் சக்தியும் அடைக்கலம் ஆனது 
ஜனகரின் மகளை தாரமாக பெறவிருந்த ஜானகி ராமனிடம்.-29

மிதிலை மன்னவன் முறைப்படி ஓலைஅனுப்பினான் தசரதற்கு
விவரம் அறிந்த அயோத்தி மன்னன் புறப்பட்டான் புடைசூழ 
அயோத்தியில் இருந்து  மணமகன் ஊர்வலம் வைதீக தேசம் 
அடைய எதிர்கொண்டு அழைத்து மரியாதை செய்தனர் மித்திகள்
தசரதர் தம் ராணிகள் புதல்வர்கள் புடைசூழ வந்து சேர்ந்தார் 
வைதேகி ராமன் கல்யாணம் சீர் சிறப்புடன் நடந்தேறவென 
மணமகள் சீரென அயோத்தியின் பொக்கிஷ நிலவரை முற்றும் 
புலம் பெயர்ந்து வந்ததுவோ என வியக்கும் வண்ணம் வகையாய் 
தன் வீட்டு மகாலட்சுமிக்காய் சீர் கொண்டு வந்தார் தயரதர்.-30

ஜனகரின் உபசரிப்பில் மகிந்தது சம்பந்தபுரம் அதனோடு
தம் குலமகள் சீதையின் திருவுரு கண்டு திருப்தியுற்று 
ராமனின் மனையாளாய் சிறப்புறும் பாக்கியம் இவளதே 
தம் அயோத்தி சிம்மாசனம் வீற்றிருக்க வாய்த்த இளவரசி
ரகுவம்சம் தழைக்க வந்த எழிலரசி என வியந்து நின்றார் 
தம் மகள் புகும் இல்லம் அவளை கொண்டாடும் விதம் 
கண்டு மனம் ஆனந்த அமைதியுற்றார் ஜனக மகாராஜா 
அத்தோடு ஜனகரின் குலக்கொடிகள் மற்ற மூவரையும்
அயோத்தி குலமகளாக வேண்டும் என பெண் கேட்டார் தசரதர்.-31

தம் குலம் செய்த பாக்கியம் உயர்குல மன்னவர் வந்து 
விரும்பி பெண்கேட்டு மணந்து செல்வது என மகிழ்ந்து 
தம் இளைய மகள் ஊர்மிளையை இலக்குவனுக்கும் 
சோதரன் பெற்ற புத்திரிகள் இருவரையும் முறையே 
பரதனுக்கு மாண்டவியும்,சத்ருகனனுக்கு ஸ்ருத கீர்த்தியும் 
நான்கு மகள்களையும் ஒருசேர அயோத்தி  மன்னனுக்கு
மருமகள் ஆக்கினார்.சோதரிகள் ஒன்று இணைந்து இன்று 
போல் என்றும் ஒற்றுமையாய்  ஆனந்தமாய் இருப்பர் என
உள்ளமதில் ஆனந்த களிப்புடன் தாரை வார்த்தார்.-32






No comments:

Post a Comment