Tuesday, 5 May 2015

ஜானகியின் ஜணனன் -1

ஜானகியின் ஜணனன் -1
அலைமகள் தன் புவிஉலக பிறப்பினை எடுக்க 
தக்க தருணம் பார்த்திருந்தாள்.
மலைமகளுக்கு ஓர் மலையரசன் தந்தையாய்
மகளுக்கு உறுதுணையாய் உற்றது போல் 
இந்த புவிமகள் மண்ணில் அவதரிக்க 
பாக்கியம் பெற்றது ஓர் ஆன்மா வையகத்தில் 
அவன் உயர் குணம் படைத்த உத்தமன்  
வைதீக தேசம் ஆண்ட மன்னவன்
மிதிலாபுரி செங்கோல் பிடித்த  கோமகன்
அரசனாய் வீற்றிருந்த ராஜரிஷி -ஸ்ரீரத்வாஜ ஜனகன்  1

இமயமலை காலடியில் கங்கையவள் 
அரவணைப்பில் ஓர் பூமி ,வைதீக தேசம் 
மிதிலாபுரி எனும் தலை நகர் கொண்டது.
வேதங்கள் வேதாந்தம்   கற்றுணர்ந்து 
வையத்து வாழ்வதனை உணர்ந்து தம் 
நாட்டின் மாந்தர்க்கு நற் பிதாவாய் 
நடத்தி வந்த ராஜரிஷி ஜனக மகாராஜா.
அவருக்கு உற்ற துணையாய் சுந்தரியாய்
கைத்தலம் பற்றிய நல மங்கை சுனைனா.2

 மக்கட் செல்வம் இல்லாமல் நாட்டு மக்களையே 
தம் செல்வமாய் பாவித்து வாழ்ந்து வந்தவர்க்கு 
அந்த ஆசையாய் ஊட்டி மனதார ஓர் மகளை 
வரவேற்க அதன் பெருமைகளை உணர்த்த 
சிவனும்-சக்தியும் மாறுவேடம் பூண்டு வந்து 
உணர்த்தி,தம்பதியினர் உள்ளகிடையில் 
மகவு குறித்து உணர்வு தனை புகுத்தி புஞ்சை 
பூமியில் உழவு செய்து மகவு பெறுவாய் என 
வரமும் தந்து வாழ்த்தி விடைபெற்றனர்.3

அம்மையப்பன் ஆணை ஏற்று உற்ற இடத்தில்
இந்திரபூஜை விழா எடுப்பித்து மாடு பூட்டி ஏர் பிடித்து 
அரசன் உழவு செய்ய புவியதனில் முட்டி நிற்றது ஏர்.
மன்னவன் சடுதியில் சென்று மண்ணை விலக்க
அதில் ஒரு பெட்டகத்தில் பூத்திருந்தது புதுமலர்
பட்டு துணி மேல் தவழ்ந்திருந்தது மகாலக்ஷ்மி
பூமாதேவியின் புதல்வி ஜனகரின் கரம் சேர்ந்தது.
நெஞ்சில் வாரி அள்ளிகொண்டார் மிதிலை மன்னன் 
அகம் மகிழ்ந்து,நெகிழ்ந்துருகி கண்ணீர் சொரிந்திருந்தார்.4

பெண் மகவை பெற்றதனால் உற்ற மகிழ்வு.அவளை 
தொடுகையில் தகப்பனாய் தான் உணர்ந்த பொழுது
அடிவயிற்றில் ஆனந்தம் புரட்டி பொங்கியது மென் தேகம் 
பொக்கைவாய் உதிர்த்து சோம்பலாய் சிரிக்க கண்டு 
மெய் சிலிர்த்தது மைதிலியை மகவாய் பெற்றவர்க்கு.
கை கால் உதைத்து தன் தொடுகையால் தகப்பனை 
ராஜரிஷி என்ற பட்டத்தையும் துறக்க வைத்தது 
உணர்ச்சி பெருக்கில் தன் மனையாளிடமும் கொடுக்க 
மறந்து பிறவி  பெற்ற பயனடைந்தார் வைதேகி தந்தை.5

ஆரவாரமாய் அலைமகளை அள்ளிக் கொண்டு படை 
சூழ மிதிலை நகர் மாளிகை அடைந்து விழா  எடுக்க 
மீண்டும் வந்தனர் அம்மையப்பன்,சிவனார் தம் 
தனுசை தந்து அதன் மகத்துவம் உணர்த்தி தக்க 
தருணமதில் தங்க விக்ரகமாய் வந்த மகவுதனை 
தலைவனுடன் சேர்பிக்கும் அஸ்திரம் என பகர்ந்து 
அரிய பொக்கிசமாய் வந்த அலைகடல் நாயகியின் 
புகழ் உணர்த்தி புவிமகளாய் வந்தவளின் பொறுப்பை 
ஜனகருக்கு தந்து ஆசி கூறி அவ்விடம் விட்டு அகன்றனர் 6

ஸ்ரீரத்வாஜரின் மகள் சீதை எனப் பெயர் கொண்டாள்
மிதிலை எனும் மண்ணின் மகள் மைதிலி ஆனாள்
வைதீக நகரம் பெற்றெடுத்ததாள் வைதேகிஆனாள்
ஜனகரின் குலக்கொடி அதனால் ஜானகி ஆனாள்
சுனைனாவின் கருவில் வளராமல் வந்தாலும்
அவள் தன் இரு விழிக்கு ஒப்பானாள் சீதை 
தாய் தந்தையர் செய்த தவப்பயனாய் வந்தனள்  
அரக்கன் கர்வம் அழித்து அவனி நலம் காக்க 
ஜனகர் மகளாய் ஜனனம் கொண்டாள் ஜானகி.7





No comments:

Post a Comment