Saturday, 16 May 2015

ஜானகியின் ஜணனன் -9

ஜானகியின் ஜணனன் -9

ஆரண்யவாசம் முடித்து அரக்கனை அழித்து தந்தை சொல் 
மிக்க மந்திரமில்லை என்ற சொல்லுக்கு புது இலக்கணம் 
கொடுத்து அவதார புருசனாய் சீதை நாயகன் நாடு திரும்ப 
ராமருகென பதினான்கு வருடம் தவமிருந்த அயோத்தி 
சிம்மாசனம் பெருமையுடன் அவரை தன்னகத்தே அமர்த்தி 
தாம் பெற்ற புண்ணியமோ பாற்கடல் நாயகன் தன்மேல் தயை
 கொண்டு தாங்கி நிக்கும் பாக்கியம் உற்றேன் என மகிழ்ந்தது 
சீதா ராமராய் சிறப்புடன் சிங்காதனம் தாங்கி பொறுப்புடன் 
மக்கள் குறை களைந்து ராம ராஜ்ஜியம் செலுத்தி வந்தனர்.-71

ஆரண்ய வாசம் செய்த வசந்தமும் திரும்ப இளந்துளிர் 
நிறைந்த செம்பச்சை இலை உடுத்திய மரங்களை போல் 
பசுமை பொங்க அயோத்தி நகர் இழந்த இன்பங்கள் யாவும்
ஒருசேர பெற்று தம்மை ஆளும் அரச மங்கை ஜானகியும்
தாய்மை பொங்க சூழ் சுமந்து அன்ன நடை விடுத்து ஆணை 
நடை பழகி அரண்மனை வளாகத்தை வளைக்கரம் கொண்ட
ஒலி எழுப்பி தன்னுள் இருக்கும் ரகு குல வம்ச மைந்தனை 
தாயின் வயிற்றில் சடுகுடு ஆடும் ராமன் அம்சத்தை  ரசித்து 
தன் மனாளன் உடன் தம் மகிழ்வை பகிர்ந்து அமர்ந்திருந்தாள்-72

ராமரை பேட்டி காண மந்திரி சுமந்திரர் முக வாட்டத்துடன்
தர்பார் மண்டபம் வர ஆசையுடன் அண்ணல் தன் பத்தினியிடம் 
அலுவல் முடித்து அரை நாளிகை வருவேன் என விடைகொண்டார்
மந்திரி ஒற்றன் ஒருவன் கொணர்ந்த செய்தியை சொல்லும் வழி
அறியாமல் திகைத்து குழம்பி நிற்க நேரம் விரையம் இன்றி 
உள்ளது உள்ளபடி உண்மையை விளம்ப தயராத ராமர் கட்டளை
ஒற்றன் உள்ளம் பதை பதைக்க தன் நாவை நொந்த வண்ணம் 
வண்ணான் ஒருவன் தன் மனைவி பேரில் கொண்ட சந்தேகம் 
உரைத்து அவளை அவதூராய் வைதேகியுடன் ஒப்பிட்டதை சொல்ல -73

துடித்து,வெடித்து சொன்னவன் நாவை அறுக்க உள்ளம் கொதித்தது 
ஜானகி நேசனுக்கு எச்சொல் தீயாய் சுடும் என எண்ணி தன் நாவில் 
அக்னி சுமந்து தன் பிராணப்ரியையை அகினிப்ரவேசம் செய்வித்தாரோ
அதுவும் வீணோ இவ்வுலகம் தீயினும் புனித தன் மனையாளை 
இவ்விதம் புறம் சொல்லுமோ என கலங்கி ராஜ்ஜியம் துறக்கவும் 
ஆயத்தமாய் நின்ற பொழுது ரகு குல வம்ச முன்னோர் தோன்றி 
ராஜா ராமனாய், ரகுவம்ச ராஜனை நியாயம் செய் என இடித்துரைக்க 
இதுவும் நாராயணன் பக்தை பதிவிரதை விருந்தை தந்த நிந்தை 
தன் பத்தினி புகட்ட வேண்டிய சாபம் என கல்மனதாய் ஏற்றார்-74

ஜனகர் மீண்டும் ஒரு சுப நிகழ்ச்சி நடத்தவென தம் மகளை 
தாய்மை பொங்க நோக்கவென சீர் சுமந்து அயோத்தி நகர் 
அடியெடுத்து வைத்தார் அரண்மனை வளாகம் மீண்டும் 
ஒரே சூன்யமாய் இருப்பது போல் ஒரு பிரமை தோன்ற 
கருக்கென கவ்வி பிடித்தது அவர் பெற்ற வயிற்றை ஆம் 
மீண்டும் ஒருமுறை அனுபவித்தார் அவர் தம் மகள் பிரிவை
ரகுராமனாய் தன் தீர்ப்பை சொல்லி சீதையை தன்னிடம் விட்டு 
பிரித்து விட்டார் தசரத மைந்தன் மாதாக்கள் மன்றாடியும் 
மாறா உறுதியுடன் அவளை அனுப்பிவிட்டார் ஆரண்யம் -75

நிலைகுலைந்து சிலையென சமைந்தார் ராஜரிஷி ஜனகர்
கருவில் வந்தால் கூட மாயை தரும் மலம் பற்றும் தம் 
மகள் புண்ணியமான புவியின் மகளாயிற்றே அவளை 
அணுக அக்னியும் அஞ்சியதே அவளுக்கா இந்நிலை எனவும்
மாற்றான் பார்வையும் படாமல் ரகு வம்சம் சிறக்க என 
சிறப்புடன் கன்னியை தானமாய் தந்தேனே அதை காக்கவும் 
தவறினாயோ ராமா,தேரைக்கு மனம் இறங்கிய ராமா நீயா 
கல்லுக்கும் உயிர் கொடுத்து அகலிகை சாப விமோசனம் 
தந்தாயே தவிக்கும் என் மகளின் நிலை அறியலையோ!-76

உம வம்சம் புகழ் காக்க உன் நாட்டு மக்களுக்கு நீதி செய்ய
என் மகளுக்கு ஏன் அநீதி இளைத்தாய் இது முறையோ தகுமோ 
நீ அறியா உண்மை உண்டோ ,உன் மனையாளின் தூய முகமும்
உனக்கு உண்மையை செப்பவில்லையோ, தாய்மை சுமந்த என் 
த்வப்புதல்வியை தன்னிடம் இருந்து பிரித்தாய் சரி என்னிடமாவது 
சேர்பித்திருக்கலாம், அதையும் விடுத்து ஆரண்யம் அனுப்பினாயே
பிரசவ வலி கண்டு என் மகள் துடித்தால் என் செய்வேன் அதனினும் 
மன்னவன் தனை சந்தேகித்தான் எனும் மனவலியால் மயங்கினால் 
என் செய்வேன் கொடும் வனவிலங்கு தாக்கினால் என் செய்வேன்-77

என மனதில் ஆயிரம் கேள்வி கணைகள் சுமந்து ராமனிடம் 
நீதி வேண்டி அபாக்கியவதி மகளின் தகப்பனாய் செல்ல அங்கே
அடி இழந்த மரம் போலே நிலம் தனில் வீழ்ந்து வேதனை சுமந்து 
அழுது அரற்றி தன்னையே நொந்து தான் கொண்ட பதவியை 
சுமையென சுமந்து குலப் பெருமை அரச நீதி என்றநியதியால் 
நிலை தடுமாறி ஜனகரினும் ஒரு படி மேலாய் தாம் தந்த நீதியால்
தன்னையே கடிந்து சிவதனுசை முறித்து கைத்தலம் பற்றிய 
மங்கையரில் நல் முத்து மண்ணினிடை விளைந்த மாணிக்கம் 
வைதேகியை பிரிந்து மூர்ச்சையுற்ற நிலையில் சடமாய் கிடந்தார்-78

கடந்தன ஆண்டுகள், தளர்ந்திருந்தார் ஜனகர், ஜானகி பிரிந்து 
ஆகின ஆண்டுகள் பல அருமையாய் பேரப்பிள்ளை இருந்திருப்பான்
விதி செய்த கோலம் விண்ணவரும் மாற்ற இயலா வினைபயன் 
ராமரின் கோலம் கண்டு விடை பெற்றவர் உலக பற்றை விட்டு 
கடமையை காலம் கழித்தார் அவ்வப்போது ஆசை மகள் நினைவு
அன்றொரு செய்தி வந்தது இளம் முனி பாலகர் இருவர் ஜானகிராமர் 
காதையை கானமாய் அயோத்தி முழுவதும் பாடி திரிகின்றனர் என்று
அது மட்டும் இன்றி அஸ்வமேத யாகம் செய்யும் ராஜா ராமரின் 
அழைப்பும்ஏக பத்தினி விரதனாய் இருந்த மருமகன் மகளை மறந்தாரா-79

யாகம் செய்ய மனையாள் அவசியம் எனவே அறிய முற்பட்டு 
ஆவல் தொனிக்க சீதை திரும்பி வந்தாலோ என ஆசையுடன் 
அயோத்தி நகர் வந்தார்,அங்கே அழகு பதுமையாய் சொர்ணத்தில் 
சீதை சிலை இருக்க அதை வைத்த கண் விலகாமல் நோக்கிய 
மருகராம் வைதேகிராமனை கண்டு விந்தை விரக்தி புன்னகை 
மற்றம் தம் மக்கள் மைந்தர்களை பெயரன்களை கண்டு மகிழ
அரண்மனை நோக்கி வந்தது செய்தி சில முனிபாலர்கள் சேர்ந்து 
யாகக் குதிரையை சிறை பிடித்தனர் என்று படை நடத்தி சென்ற 
ரகு குல இளவல்களையும் கணை கொண்டு கட்டினர் என்று-80

ஸ்ரீராமர் சினம் கொண்டு சீறிப் புறப்பட சிந்தை கொண்ட ஜனகரும்
ஆவல் கொண்டு பின் தொடர்ந்தார் அங்கே அருமையாய் பாலகர் 
இருவர் ஒளி பொருந்திய வதனம் கொண்டு ராமரிடம் கோபம் கொள்ள
வீரத்தை பெற்ற பிள்ளைகள் நாங்கள் வளைத்திடும் நாணை என 
வீர வசனம் பேசி நின்றனர் அதற்குள் அங்கே மின்னலென வந்த 
வைதேகி அந்த பிள்ளைகளை வைது சிலையாய் சமைந்த ராமரை 
காட்டி அவர் தம் தந்தை என எடுத்துரைக்க வில்லை துறந்து தம் 
தந்தை தாழ் பணிந்து நின்றனர் உணர்வு பெற்ற ராமர் சீதையை நோக்க 
வந்த காரியம் முடிந்தது என நாயகனை வணங்கி அன்னைமடி சேர்ந்தாள்
ஏர் பூட்டி உழவு செய்து பேழையில் வந்த மிதிலை மகள் தன் அன்னையாம்
பூமாதேவி மடிதனில் தஞ்சம் புகுந்தால் வந்த நாள் முதலாய் வாஞ்சையாய் 
வாரி அனைத்து வளர்த்து விட்ட தந்தைக்கு மானசீகமாய் நன்றி சொன்னால் 
மண்ணில் இருந்து வந்து மகளென வளர்ந்து ராமனின் மனையாட்டியாய்
ரகு குல மருமகளாய் அரக்கன் அவன் தலை முடித்த திருமகளாய் 
ஆரண்யம் வாழ்வு கொண்டு ராமகாதை தந்த தவப்புதல்வி தந்தை 
மகள் என்ற உறவுக்கு அழியா புகழ் தந்து தாயிடம் ஐக்கியமானாள் 
ஜானகியின் ஜனன் புவனம்புகழ் ஜனகரை வாழ்த்தி அவனியில் பிறக்கும் 
திருமகள்களுக்கு அவரை போன்ற தந்தையை வரமாய் வேண்டுவோம்-81


No comments:

Post a Comment