Tuesday, 5 May 2015

ஜானகியின் ஜணனன் -2

ஜானகியின் ஜனகன் -2


வரமாய் ஆசியாய் ஆசை மகளாய் அம்பிகையை
பெற்றபோதும் அறியா மூடன் ஆனான் தட்சன் 
மாதர்குல மாணிக்கத்தை மகவாய் பார்வதியைபெற்று
சிவத்துடன் சேர்த்து சிறப்புற வாழ்ந்தான் மலையான்.
அவ்வண்ணமே சீதையாய் செந்தாமரை திருமகளை 
பெற்று அவளை தன இதயகமலத்தில் வைத்திருக்கும் 
பத்மவாசனிடம் சேர்த்து  புவனம் புகழ்பெற்றார் ஜனகர்
இவர்கள் சக்திகளை தன் மகவாய் பெற்றவர்கள் 
புத்திரிகளை வளர்க்கும் சுகம் தனையும் உற்றவர்கள்-8

சீதை வந்த வேளை ஜனகர் குலம் பெற்றது மேலும் 
மூன்று பெண்மகவுகளை ஊர்மிளை,மாண்டவி,
ஸ்ருதகீர்த்தி என பாற்கடல் கடைந்த வேளை 
லட்சுமி தேவியுடன் அவதரித்த பூமாலைகள் 
தக்க தருணத்தில் தகுந்த இடத்தில் சூட காத்திருந்த 
பூங்கோதைகள், தத்தி தவழ்ந்து ,குந்தி மகிழ்ந்து 
குட்டை பட்டு சொக்காய் உடுத்தி துளிர்நடை பயிலும் 
பருவமதில் அரிசிப்பல் தெரிய சிரித்து அப்பா என 
விளித்து ஆனந்தமாய் வந்து அவரை தழுவிக்கொள்ள,-9

அவள் அடுத்த அடி வைக்கும் முன்னே விழுந்திடுமோ 
என விரைந்து வந்து வாரி அணைத்திடுவார் ஜனகர்.
அவளாய் பழகட்டும் விடுங்கள் என சுனைனை 
சொல்லும் மொழிகளுக்கு செவிமடுக்கார் தந்தை.
மார்மேலும்,தோள் மேலும் இட்டு பக்குவமாய் 
ஆசைபொங்க அன்பாய் வளர்த்து வந்தார் ராஜரிஷி.
மைதிலியின் மழலை மொழியில் லயித்திருப்பார் 
பேதை அவள் பெதும்பை வயது அடையும் முன்னே 
அம்பிகையை வணங்கி அறிவு புகட்டும் கடமையில் 
ஆயகலைகளை கற்பிக்கும் ஆசான் ஆனார் ஜனகர்-10

வேதமும்,வேதாந்தமும் கற்ற வித்தகர் இந்த ராஜரிஷி 
தன்னிடம் வந்தடைந்தது தரணிக்கே நன்மை பயக்க 
வந்த நாயகி என்பதை உணர்ந்தவர் அவர். ஒருபொழுது 
பலர் இணைந்தும் அசைக்க இயலா   சிவதனுசை தன் 
மகள் அனாயாசமாய் எடுத்து நான் ஏற்ற கண்டு இவள்
அவதாரப் பிறப்பு என்றே உணர்ந்தவர் அவர்.மிதிலையில் 
பிறந்தமகளாய் இருக்கும் போதே அவர் இயன்றவரை 
எல்லா சுகங்களையும் ஈந்து அரிய பொக்கிசமாய் அவளை 
அன்புடன் வளர்க்க சங்கல்பம் செய்து நிறைவேற்றியவர்.-11

நாளும் பொழுதும் இனிதே கழிய பெதும்பை அவள் 
தக்க துணையுடன் சேரும் பருவம் வந்தடைந்தாள்
சிறு பாவாடை கட்டிய மகள் சீரிய முறையில் வளர்ந்து 
சிருங்காரம் நிறைந்த பாவையாய் அழகுப் பதுமையாய் 
கருணை நிறைந்த கன்னியாய் ஒயிலான ஓவியமாய் 
சர்வ குண பூஷிதையாய் செந்தாமரை நாயகியாய்
மன்னவன் ஒருவன் தோள் சேரும் பூமாலையாய் 
மாறும் தருணம் வந்தது என்று அவள் வதனம் சொல்ல
சிவதனுசு அவள் மணாளனை இட்டுவரும் என்றிருந்தார்.-12

பெண்கள் வளரும் பருவம் விரைந்து கடந்து விடும்
ஜனகரின் குலக்கொடிகளாய் நால்வர் வளர்ந்தனர்
சீராட்டி,பாராட்டி சிறப்புடன் வளர்த்தாலும் அவை
செல்லுமிடம் சென்று படர்ந்தாள் தான் பெருமை 
என உணர்ந்தனர் தாய் தந்தையர்,சுயம்வரம் நடத்த 
தக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுத்தனர் 
அந்த தருணத்தில் விஸ்வமிதிர முனிவர் தன் இரு 
சீடர்களுடன் தன் ராஜ்ஜிய எல்லையில் வந்தது அறிந்து 
மன்னவன் விரைந்தனன் அவர் இருப்பிடம் நோக்கி-13

முனிவர் கங்கை கரையோரம் வீற்றிருக்க அவர் தன் 
இரு சீடர்களும் பணிவாய் பணிவிடை செய்ய இதை
கண்ணுற்ற மன்னவன் அனைவரையும் வணங்கி நின்றான் 
சீடர்களை கண்டவர் கண்கள் அவர் பால் விட்டு அகல 
மறுக்க,முனிவருக்கு தரவேண்டிய மரியாதை கருதி 
அவர் முன்னே அடுத்துவரும் சுயம்வர வைபவத்தில் 
தவறாது கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனன் மன்னவன்
ஆமோதித்து முன்னால் ராஜரிஷி இந்நாள் ராஜரிஷிக்கு 
தயரதர் புத்திரர்களை தக்க உரையுடன் அறிமுகம் செய்வித்தார்.-14

சகல அம்சங்களும் ஆகிருதியான தோற்றம் கொண்ட 
ஒளிபொருந்திய அமைதி தவழும் மென்னகை முகமும்
கம்பீரமாய் நேர்கொண்ட பார்வையுடன் காந்தமென கவர 
தெய்வீக சன்னதியில் நின்ற நிலையில் தனை மறந்தவர் 
ராமபிரான் தோற்றத்தை தன் நயனகளில் நிறைத்திருந்தார் 
அதன் பின்னர் கன்னிபெண்ணின் தகப்பனார் ஆனார் ஜனகர்.
வாலிப பருவ நற்குல இளவரசர்களை கண்டவுடன் தன் மகள் 
ஜானகிக்கு ஏற்ற நாயகன் இவனோ என கவனமாய் கண்டார்
பின் மரியாதை முகமன் கூறி சுயம்வரம் வந்தடைய வேண்டினார்.-15



No comments:

Post a Comment